திருச்சியை சேரந்த மூத்த அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் தொழிலதிபர் கே. என். ராமஜெயம், 2012ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி கடத்திச் சென்று படுகொலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கை முதலில் திருச்சி மாநகர காவல்துறை, 12 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வந்த நிலையில், எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் சிபிசிஐடி மாற்றம் செய்யப்பட்டது.
அங்கும் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்பதால் ராமஜெயம் படுகொலை வழக்கு சிபிஐ வசம் மாற்றப்பட்டது. அங்கும் நடத்தப்பட்ட விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி, சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் டிஎஸ்பி மதன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்தி குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அந்தவகையில், இவ்வழக்கில், தமிழகத்தின் பிரபல ரவுடிகளான திண்டுக்கல்லை சேர்ந்த மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ் குமார், திருச்சியை சேர்ந்த சாமி ரவி, மாரிமுத்து, சத்யராஜ், திலீப், தென்கோவன், ராஜ்குமார், சிவா, சுரேந்தர், கலைவாணன், கடலூர் சிறையில் இருக்கும் செந்தில் குமார் ஆகிய 13 நபர்களை கண்டறிந்து அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றத்தின் அனுமதி கோரப்பட்டு மேற்படி 13 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.
இவர்களில், குடவாசலை சேர்ந்த தென்கோவன் தவிர மற்ற அனைவரும் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொண்டனர். சோதனைக்கு ஒப்புக்கொண்ட, 12 பேருக்கும் 'பாலிகிராப்' எனப்படும் உண்மை கண்டறியும் சோதனை சென்னையில் நடைபெற்றது.
இந்தச் சோதனையின் முடிவிலும் ராமஜெயம் படுகொலை வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, உண்மை கண்டறியும் சோதனையில் பங்கேற்ற அனைவரிடமும் சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் மீண்டும் முதலில் இருந்து விசாரணை நடத்த முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
அந்தவகையில், முதற்கட்டமாக, திண்டுக்கல்லை சேர்ந்த தினேஷ் குமாரை மீண்டும் அழைத்து, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிய வருகிறது.
இதனைத்தொடர்ந்து மற்றவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று சிறப்பு புலனாய்வுக் குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறப்பு புலனாய்வுக் குழு, முதலில் இருந்து விசாரணையை துவங்கியுள்ள சம்பவம் பிரபல ரவுடிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“