பெருநகர சென்னை மாநகராட்சியின் பல வார்டுகளில் உள்ள காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. மாநகராட்சி திட்டங்களை செயல்படுத்துவதில் தி.மு.க நிர்வாகிகளின் தலையீடு உள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சாமுவேல் திரவியம் தலைமையில் சென்னை மாநகராட்சியில் உள்ள 13 காங்கிரஸ் கவுன்சிலர்களில் 10 பேர் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனை சந்தித்து கடந்த வெள்ளிக்கிழமை புகார் அளித்தனர். அதில், தி.மு.க நிர்வாகிகளின் தலையீடு காரணமாக காங்கிரஸ் கவுன்சிலர்களின் கோரிக்கைகளை மாநகராட்சி பொறியாளர்கள் நிராகரிப்பதாக புகார் அளித்தனர்.
பணி செய்ய முடியவில்லை
கடந்த ஆண்டு நடந்த மாநகராட்சி தேர்தலில் தி.மு.க கூட்டணியில் 13 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கவுன்சிலர்கள் கூறுகையில், மாநகராட்சி பணியில் அலட்சியம் இருப்பதை காங்கிரஸ் கவுன்சிலர்கள் புகார் தெரிவிக்கையில். "தி.மு.கவின் தலையீடு காரணமாக ஜூனியர் இன்ஜினியர்கள் அதை புறக்கணிக்கின்றனர். இதனால் மக்களின் தேவையான திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. உள்கட்டமைப்பில் எந்த மேம்பாடுகளையும் பரிந்துரைக்க முடியவில்லை" என்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.
மயிலாப்பூரில் உள்ள வார்டு அலுவலகத்தில் தி.மு.க நிர்வாகிகள், காங்கிரஸ் கவுன்சிலருடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. எழும்பூரில் உள்ள ஒரு வார்டிலும் இதே போன்ற சம்பவம் நடந்ததாக கவுன்சிலர் ஒருவர் புகார் தெரிவித்தார். “நாடாளுமன்றத் தேர்தலில் இந்தப் பிரச்சினை எங்களின் வாய்ப்புகளைப் பாதிக்காமல் இருக்க எங்களால் முடிந்தவரை முயற்சி செய்து வருகிறோம். ஆனால் வார்டுகளில் உள்ளாட்சி நிர்வாகத்தில் தலையிடுவது குடியிருப்பாளர்களிடையே தவறான தகவல்களுக்கு வழிவகுக்கும் என்று நாங்கள் பயப்படுகிறோம்” என்று காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர் கூறினார்.
காங்கிரஸ் தலைமை பதில் என்ன?
மேலும், இவ்விவகாரம் தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைமை இதுவரை முதல்வர், தி.மு.க தலைவர் ஸ்டாலின் அல்லது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேருவிடமோ எதுவும் தெரிவிக்கவில்லை என்று காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர் கூறினார். இது தொடர்பாக தி.மு.க. கவுன்சிலர்கள் சிலர் கூறுகையில், குடியிருப்போர் நலனுக்காக காங்கிரசுடன் இணைந்து செயல்பட முயற்சிப்பதாக தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil