/indian-express-tamil/media/media_files/2025/08/13/high-court-on-sanitary-workers-2025-08-13-12-09-15.jpg)
ரிப்பன் மாளிகை முன்பு 13-வது நாளாக போராட்டம்: தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த ஐகோர்ட் உத்தரவு
சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 ஆகியவற்றில் தூய்மைப் பணி தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கடந்த 1-ந்தேதி முதல் ரிப்பன் கட்டிடம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு, பகல் பாராமல் அவர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அவர்களின் போராட்டத்திற்கு, அ.தி.மு.க., த.வெ.க., பா.ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதேபோல, திரைப்பட நடிகர் நடிகைகளும் நேரில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 13-வது நாளாக இன்றும் தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி தேன்மொழி என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, நடைப்பாதை, சாலைகளை ஆக்கிரமித்து போராட்டம் நடத்த அனுமதியில்லை. அதனால் அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது எனவும், சென்னையில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் போராட்டத்தை நடத்தி கொள்ளுங்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் மீது சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். முன்னதாக 2 நாட்களில் தீர்வு ஏற்படும் என்பதால் விசாரணையை, செவ்வாய்கிழமை தள்ளி வைக்கக்கோரிய கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். இந்த போராட்டம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதிக்கப்படாத இடங்களில் போராட்டம் நடத்தக்கூடாது என உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
ஆனாலும், நீதிமன்ற உத்தரவைக் கருத்தில் கொள்ளாமல், தூய்மைப் பணியாளர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். நீதிமன்ற உத்தரவையும் மீறி போராட்டம் தொடர்வதால், போராட்டக்காரர்களைக் கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என்பதில் தூய்மைப் பணியாளர்கள் உறுதியாக உள்ளனர். இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.