சென்னை உயர்நீதிமன்றம், வரும் டிசம்பர் மாதம் 31-ஆம் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் போலி வாக்காளர்கள் உள்ளதால், அவர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கும் வரை, அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிடக் கூடாது என்று உத்தரவிடக்கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர் கேர் நகர் தொகுதியில் 45,819 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அப்போது 50,100 ஓட்டுகள் கூட வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய இடம் வகிக்கும் என திமுக வழக்கறிஞர் வில்சன் வாதமிட்டார். மேலும் ராதாபுரம் தொகுதியில் 42 வாக்குகள் வெற்றியை தீர்மானித்ததாகவும் அவர் கூறினார்.
இதன் மூலம், ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக கூறியதை விட அதிக போலி வாக்காளர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 44,999 போலி வாக்காளர்கள் இருப்பதாக திமுக கூறிய நிலையில் 45,819 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையமே தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, "டிச.31-ம் தேதிக்குள், ஆர்.கே.நகர் தொகுதிக்கான தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பணையை டிசம்பர் முதல் வாரத்திற்குள் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். இந்த உத்தரவில் எவ்வித மாற்றமுமில்லை" என உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் நீக்கப்பட்ட போலி வாக்காளர்கள் விவரம் நாளை இணையத்தில் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.