ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மனு செய்த விஷால், ஜெ.தீபா உள்பட 72 பேர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. நாளை வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும். எனவே நாளை மாலை எத்தனை பேர் களத்தில் இருப்பார்கள் என்பது தெரியவரும்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்வது 4ம் தேதி முடிவடைந்தது. கடைசி நாளான 4ம் தேதி மட்டும் 110 பேர் மனுத்தாக்கல் செய்தனர். மொத்தமாக 145 பேர் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று காலை 11 மணிக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி தலைமையில் நடந்தது. முதலில் அரசியல் கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
திமுக வேட்பாளர் மருது கணேஷ், அதிமுக வேட்பாளர் இ.மதுசூதணன், பாஜக வேட்பாளர் கரு. நாகராஜன் ஆகியோரின் மனுக்கள் பரிசீலனைக்குப் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பின்னர் சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. டிடிவி.தினகரன் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
நடிகர் விஷால் மனு பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சுயேட்சை வேட்பாளர்கள் தினேஷ், பிரேம் குமார் ஆகியோர், ‘விஷால் மனுவை முன் மொழிந்தவர்கள் கையெழுத்து போலியானது. குற்றவழக்குக் குறித்து எதையும் குறிப்பிடவில்லை. எனவே மனுவை நிராகரிக்க வேண்டும்’ என ஆட்சேபனை தெரிவித்தனர். விஷால் மனு மீதான விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டது.
அதே போல ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் மனுவும் நிராகரிக்கப்பட்டது. மாலை 5.20 மணிக்கு விஷால் மனு மீதான விசாரணை தொடங்கியது. அப்போது விஷால் மனுவில் கையெழுத்திட்ட சுமதி, தீபன், கார்த்திகேயன் ஆகியோர் தேர்தல் நடத்தும் அதிகாரியை சந்தித்து, எங்கள் கையெழுத்து போலியானது என தெரிவித்தனர்.
இவர்களை மதுசூதணன் ஆட்கள் இவர்களை மிரட்டி, இப்படி சொல்ல வைத்ததற்கான ஆடியோவை விஷால் வெளியிட்டார். இதைச் சொல்லி விஷால் வாதிட்டார். நள்ளிரவு 11 மணி மனு மீதாதன விசாரணை நடந்தது. நள்ளிரவில் அவருடைய மனு தள்ளுபடியானது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மனு செய்த 145 மனுக்களில் 73 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 72 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது. நாளை 7ம் தேதி மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள். எனவே ஆர்.கே.நகர் தேர்தலில் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் நாளை மாலை வெளியாகும்.