ஆர்.கே.நகரில் இன்று (செவ்வாய் கிழமை) மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது.
ஆர்.கே.நகரில் வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், சுயேட்சை வேட்பாளராக டிடிவி தினகரன் உள்ளிட்ட வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். இந்த வேட்பாளர்கள் அத்தொகுதியில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். இதனிடையே, அதிமுக மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக குற்றச்சாட்டும் எழுந்தது.
இந்நிலையில், ஆர்.கே.நகரில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. கடைசி நாளான இன்று அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து அமைச்சர்கள் காமராஜ், ஜெயக்குமார் ஆகியோரும், திமுக வேட்பாளர் மருது கணேஷை ஆதரித்து அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும், சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் ஆகியோர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இன்றுமுதல், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிக்கை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
- இன்று மாலை 5 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை தேர்தல் தொடர்பான பிரச்சார பொதுக்கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ நடத்தவோ, ஒருங்கிணைக்கவோ, பங்கேற்கவோ கூடாது
- பொதுமக்களை ஈர்க்கும் வகையில் இசை நிகழ்ச்சி, திரையரங்க செயல்பாடு என கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தவோ அல்லது அதனை ஒருங்கிணைப்பதன் மூலம் மக்களிடம் தேர்தல் பரப்புரை செய்யக்கூடாது. அப்படி மீறி செய்தால், 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
- தொகுதிக்கு வெளியே இருந்து வரவழைக்கப்பட்ட கட்சியின் பிரதிநிதிகள், பணியாளர்கள், அத்தொகுதியின் வாக்காளர் அல்லாதோர் இன்று மாலை 5 மணிக்கு மேல் அத்தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
- வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துச் செல்லவும், அதன்பின் வாக்குச்சாவடியிலிருந்து மீண்டும் அழைத்துச் செல்லவும் வேட்பாளரோ அல்லது அவரது முகவரோ வாகனங்களை வாடகைக்கு எடுக்கவும், வாங்கவும் அல்லது பயன்படுத்தவும் எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக்கூடாது. இது 1951-ஆம் ஆண்டு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 133-ஆம் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய செயலாகும்.
- 19-ஆம் தேதி மாலை 5 மணிமுதல் தேர்தல் நடைபெறும் 21-ஆம் தேதி மாலை 5 மணிவரை கருத்துக்கணிப்புகளை வெளியிடவும், நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.