ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் மருதுகணேஷ்க்கு ஆதரவளிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மறுமலர்ச்சி திமுகவின் உயர் மட்ட ஆலோசனை குழு கூட்டம், இன்று காலை எழும்பூரில் உள்ள தாயகத்தில் நடந்தது. கூட்டம் முடிந்த பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த வைகோ, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவை ஆதரிப்பதாக அறிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது :
’’திமுகவுக்கு ஆதரவளிப்பது என்ற தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டாக ஏற்பட்டுள்ள அரசியல் சூழல், தமிழகத்தின் எதிர்காலம் பற்றிய கவலையையும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தியிருக்கிறது. அனைத்து துறைகளிலும் அதிமுக அரசு தோல்வி அடைந்துவிட்டது. மாநிலை உரிமைகளை ஒவ்வொன்றாக மத்திய பா.ஜ.க. அரசிடம் பறிகொடுத்துவிட்டு, டெல்லியில் தாழ்பணிந்து கிடப்பதால், தமிழக மக்களின் கடும் கோபத்துக்கு ஆளாகியுள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக மாநில சுயாட்சி கொள்கையை தமிழகத்தில் இருந்துதான் பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுப்பினார்கள். அண்ணா அவர்களின் அடியொட்றி, கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் மாநில சுயாட்சி தீர்மானத்தை நிறைவேற்றியதோடு, இந்தியாவின் பல்வேறு மாநில தலைநகரங்களில் மாநில சுயாட்சி கோஷம் எழ காரணமாக இருந்தார்.
ஆனால் இன்று மாநில சுயாட்சி கொள்கையை நிராகரிப்பதோடு, கூட்டாட்சி தத்துவத்துக்கு வேட்டு வைக்கும் விதமாக மத்தியில் ஆளும் பாஜக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் ஆற்று நீர் உரிமைகள் பறி போகிறது. முக்கிய பிரச்னைகளில் மத்திய பாஜக அரசை தட்டி கேட்க முடியாமல் அதிமுக அரசு உள்ளது.
திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கை கோட்பாடுகளுக்கு எதிரான இந்துத்துவ மத வெறி சக்திகளில் ஆக்டோபஸ் கரங்கள் தமிழகத்தை வளைக்கும் பேராபது சூழ்ந்து வருகிறது. தமிழக அரசை இயக்கி வரும் மத்திய பாஜக அரசு, மறைமுகமாக கூட அல்ல, ஆளுநர் மூலம் நேரடியாகவே தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றத் துடிக்கிறது.
மத்திய பாஜக நடத்தி வரும் அரசியல் திருவிளையாடல்களுக்கு ஆளும் அதிமுக ஆட்சியாளர்கள் துணை போய்கொண்டு இருக்கிறார்கள். இந்த ஜனநாய படுகொலைகளை வேடிக்கைப் பார்க்க முடியாது. இந்த சூழலில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழக மக்களின் நம்பிக்கை இழந்துவிட்ட அதிமுக அரசுக்கு உடனடி பாடம் கற்பிக்கப்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது. இவை அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து, தமிழகத்தின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, ஆர்.கே.நகர் தேர்தலை அனுக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மகத்தான தியாகத்தால் அளப்பறிய சாதனைகளாலும் ஒரு நூற்றாண்டு காலம் கட்டிக் காப்பாற்றப்பட்ட திராவிட இயக்க லட்சியங்களையும் கோட்பாடுகளையும் சிதைப்பதற்க்கும் கங்கணம் கட்டிக் கொண்டு, இந்துத்துவா சக்திகளும், திராவிட இயக்கத்தின் பரம விரோதிகளும் நாலா திசைகளிலும் இருந்து தாக்குதல் நடத்தும் சூழலில் திராவிட இயக்கத்தை பாதுகாக்க வேண்டிய வரலாற்றுக் கடமை மதிமுகவுக்கு இருக்கிறது.
எனவே ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவளிக்கவும் அவருடைய வெற்றிக்கு பாடுபடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.’’
இவ்வாறு வைகோ தெரிவித்தார்.
தமிழக அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக இருந்த வைகோவும், ஸ்டாலினும் இந்த அறிவிப்பின் மூலம் மீண்டு இணைய வாய்ப்பு கிடைத்துள்ளது. இருவரும் சில திங்களுக்கு முன்பு கோவை விமானத்தில் சந்தித்துப் பேசிக் கொண்டனர். அப்போது திமுக வேட்பாளருக்கு ஆதரவளிக்குமாறு வைகோவிடம் ஸ்டாலின் கேட்டதாக சொல்கிறார்கள்.