ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அனைத்து தெருக்களிலும் கண்காணிப்பு காமிரா பொருத்தக் கோரி திமுக தொடர்ந்த வழக்கு திங்கள் கிழமை விசாரிக்கப்பட இருக்கிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் மருது கணேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வருமாறு: ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. பின்னர் வாக்காளர்களுக்கு பண வழங்குவதாக எழுந்த புகாரை தொடர்ந்து தமிழக அமைச்சர்களின் வீடுகளில் வருமான வரி துறையினர் நடத்திய சோதனையில் 89 கோடி ரூபாய் வாக்காளர்களுக்கு ஆளும் கட்சியான அதிமுக வழங்கியது தொடர்பான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மீண்டும் வரும் 21 ஆம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி தேர்தல் பணிகள் தொடங்கியுள்ளது. தற்போதும் ஆளும் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் அளித்து வருகின்றனர். இதுவரை தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 200 மேற்பட்ட புகார்கள் தேர்தல் தேர்தல் ஆணையம் பெறபட்டுள்ளது. அதிகபடியான புகார்கள் வருவதால் தற்போது உள்ள பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். அதன்படி தொகுதியில் மேலும் கண்காணிப்பை அதிகபடுத்த வேண்டும்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு தற்போது உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தொகுதியில் உள்ள 968 தெருக்களின் இரு பக்கங்களிலும் கண்காணிப்பு காமிரா பொருத்த வேண்டும். தேர்தல் ஆணையம் தொகுதியில் உள்ள அனைத்து வாக்குசாவடி மையங்களும் பதற்றம் நிறைந்து என தெரிவித்துள்ளது. எனவே அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் சுழலும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி தொகுதியில் பதிவாகும் வீடியோக்கள் அனைத்தையும் இணையத்தில் நேரடி ஒளிபரப்ப செய்ய வேண்டும். இதன் மூலம் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்குவதை தடுக்க முடியும். இதன் மூலம் வரும் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலை நியாயமான முறையில் நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைளையும் எடுக்க வேண்டும்’ என மனுவில் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பான இந்த வழக்கை இன்றே அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என மருது கணேஷ் தரப்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், கே.ரவிசந்திர பாபு அமர்வில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் முறையிட்டார். அப்போது நீதிபதிகள் வழக்கை இன்று விசாரணைக்கு எற்க மறுத்தனர். நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.
அப்போது மூத்த வழக்கறிஞர், ‘நாளை நான் சென்னையில் இல்லை. எனவே திங்கள் கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்’ என கோரினார். இதனையடுத்து நீதிபதிகள் வழக்கை வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் அதற்குள் எதிர் தரப்பினருக்கு மனு தொடர்பான விபரங்களை அளிக்க வேண்டும் என தெரிவித்தனர். பின்னர் வழக்கை திங்கள் கிழமை விசாரணை எடுத்துக் கொள்ள அனுமதித்தனர். இந்த வழக்கில் நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்க இருக்கிறது? என்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.