ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட 59 வேட்பாளர்களும் தங்கள் செலவு கணக்கை செலவின பார்வையாளர்களிடம் சமர்ப்பித்தனர். அனைவரது செலவு கணக்கும் தேர்தல் ஆணையம் நிர்ணயித்த உச்சவரம்புக்குள் இருந்தது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட 59 வேட்பாளர்களும் கடந்த இரண்டு நாட்களாக தங்கள் தேர்தல் செலவு கணக்கை செலவின பார்வையாளர்களிடம் சமர்ப்பித்துவந்தனர். இதில், ஆர்.கே.நகரில் வெற்றிபெற்ற டிடிவி தினகரன் உட்பட 9 வேட்பாள செலவின கணக்குக்கும், செலவின பார்வையாளர்கள் பராமரித்து வந்த நிழல் கணக்குக்கும் வித்தியாசம் இருந்தது.
டிடிவி தினகரன் ரூ.16.8 லட்சத்துக்கான செலவு கணக்கை தாக்கல் செய்தார். ஆனால், நிழல் கணக்கில் அத்தொகை ரூ.20.8 லடசமாக பதிவாகியிருந்தது. அதேபோல், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் ரூ.20.05 லட்சத்துக்கான செலவு கணக்கை தாக்கல் செய்தார். அத்தொகை நிழல் கணக்கில் ரூ.24.73 லட்சமாக பதிவாகியிருந்தது. திமுக வேட்பாளர் மருதுகணேஷ் ரூ.21.07 லட்சத்துக்கான செலவு கணக்கை தாக்கல் செய்தநிலையில், நிழல் கணக்கில் 22.51 லட்சமாக பதிவாகியுள்ளது. அதேபோல், பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் ரூ.5.37 லட்சத்துக்கான செலவு கணக்கை தாக்கல் செய்தார். அத்தொகை நிழல் கணக்கில் ரூ.6.39 லட்சமாக பதிவாகியிருந்தது.
செலவு கணக்குக்கும், நிழல் கணக்குக்கும் உண்டான வேறுபாடு குறித்து, வேட்பாளர்களிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கோரியுள்ளது.
சில வேட்பாளர்கள் சமர்ப்பித்த செலவு கணக்கைவிட, நிழல் பதிவேட்டில் குறைவான தொகை பதிவாகியிருந்தது.