ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ரூ20 டோக்கன் கொடுத்தது உண்மை என டிடிவி தினகரன் ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரன் பகீர் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு கடந்த டிசம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். 13 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் இடைத்தேர்தல் ஒன்றில் ஆளும்கட்சி தோற்றது இந்தத் தேர்தலில்தான்.
ஆர்.கே.நகரில் ஆளும்கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு தலா 6000 ரூபாய் வழங்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. அதேசமயம் டிடிவி தினகரன் தரப்பில் டோக்கனாக 20 ரூபாய் நோட்டுகளை கொடுத்துவிட்டு, தேர்தல் முடிந்த பின்னர் ரூ10,000 பெற்றுக்கொள்ளலாம் என வாக்குறுதி கொடுக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. டிடிவி தினகரனின் வெற்றிக்கு 20 ரூபாய் டோக்கன்தான் காரணம் என அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் புகார் கூறின.
டிடிவி தினகரன் இதை ஏற்கவில்லை. ‘ஆர்.கே.நகர் மக்களை இழிவுபடுத்தும் விதமாக எதிர்க்கட்சிகள் இந்தப் புகாரை சுமத்துவதாக’ டிடிவி தினகரன் கூறினார். தவிர, ‘மக்களிடம் அப்படி பணம் தருவதாக வாக்குறுதி கொடுத்து ஜெயிக்க முடியுமா? என் மீது மக்களுக்கு அவ்வளவு நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் நான் வாயால் சொல்லியிருந்தால் போதாதா? ஏன் 20 ரூபாய் நோட்டு கொடுக்க வேண்டும்?’ என்றெல்லாம் கேள்விகளை எழுப்பியிருந்தார் தினகரன்.
ஆனால் முதல் முறையாக டிடிவி தினகரன் ஆதரவாளர் ஒருவரே, ‘ஆர்.கே.நகரில் நாங்கள் 20 ரூபாய் டோக்கன் கொடுத்தது உண்மைதான்’ என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அவர், முன்னாள் எம்.எல்.ஏ.வான ராஜசேகரன். காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிமுக.வுக்கு வந்தவரான ராஜசேகரன், அதிமுக இரு பிரிவுகளாக பிளவுபட்டபோது அம்மா அணியில் இணைந்தார்.
டிடிவி தினகரன் ஆதரவாளராக இயங்கி வரும் அவர், இன்று திருச்சி மாவட்டம் முசிறியில் நடந்த தங்கள் ஆதரவு செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அந்தக் கூட்டத்தில்தான், ரூ20 டோக்கன் கொடுத்ததை வெளிப்படையாக பேசி ஒப்புக் கொண்டிருக்கிறார். செயல் வீரர்கள் கூட்டம் என்பதால், தங்களின் பேச்சு வெளியே வராது என ராஜசேகரன் நினைத்திருக்கலாம். ஆனால் அவரது பேச்சு அடங்கிய வீடியோ காட்சிகள் தொலைக்காட்சி கேமராமேன்களால் பதிவு செய்யப்பட்டு, ஒளிபரப்பு ஆகிவிட்டது.
டிடிவி தரப்பு நிர்வாகிகள் அமர்ந்து பேசி செய்த மாஸ்டர் பிளான் அடிப்படையில் ரூ20 கொடுக்கப்பட்டதாகவும் ராஜசேகரன் கூறியிருக்கிறார். தவிர, டிடிவி தினகரன் சொன்னபடியே ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டதாகவும், தேர்தலில் தினகரன் வெற்றிக்கு இவை உதவியதாகவும் கூறியிருக்கிறார் ராஜசேகரன்.
டிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகி ஒருவரே ஆர்.கே.நகர் அத்துமீறல்களை ஒப்புக்கொண்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வீடியோ ஆதாரத்தை வைத்துக்கொண்டு, டிடிவி தினகரன் வெற்றியை எதிர்த்து திமுக அல்லது அதிமுக தரப்பு நீதிமன்றத்தை நாடவும் வாய்ப்பு இருக்கிறது.
இந்த சர்ச்சை பேச்சு குறித்து டிடிவி தினகரனிடம் இன்று செய்தியாளர்கள் கேட்டபோது, ‘தவறாக கூறியிருக்கிறார்’ என சிம்பிளாக முடித்துக் கொண்டார். ராஜசேகரன் பேச்சின் முழு வீடியோவையும் கேட்டபிறகு டிடிவி தினகரன் தரப்பில் முழுமையான விளக்கம் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜசேகரன் மீது கட்சி சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.