அனல் பறக்கும் பிரச்சாரம், பண பட்டுவாடா புகார் எல்லாம் ஓய்ந்து ஆர்.கே.நகரில் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையடுத்து, அவரது ஆர்.கே.நகர் தொகுதியில் டிசம்பர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்தது. இந்த தேர்தலில் அதிமுக சார்பாக மதுசூதனன், திமுக சார்பாக மருது கணேஷ், பாஜக சார்பாக கரு.நகராஜன், சுயேட்சையாக களமிறங்கும் டிடிவி தினகரன் என 59 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அதிமுக, டிடிவி தினகரன் ஆகியோர் சார்பாக வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்யப்பட்டதாக புகாரும் எழுந்தது. இந்நிலையில், அனல் பறக்கும் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, தேர்தல் நாளான நாளை வரை மதுபானக் கடைகளை மூட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், பிரச்சாரத்திற்காக வெளியூரிலிருந்து அழைத்து வரப்பட்ட அரசியல் கட்சியினர், பணியாளர்கள், அத்தொகுதியின் வாக்காளர் அல்லாதோர் ஆகியோர் நேற்று மாலை 5 மணிக்கு மேல் அத்தொகுதியில் இருக்கக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, அவ்வாறு யாரேனும் இருக்கின்றனரா என, திருமண மண்டபம், சமுதாய கூடம், தங்கும் விடுதிகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இத்தேர்தலுக்காகம், 258 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை காலை 8 மணிமுதல் 5 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும். வரும் 24-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தேர்தல் பாதுகாப்புக்காக 15 கம்பெனி துணை ராணுவ படைகள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, பறக்கும் படையினர், கண்காணிப்பு பார்வையாளர்கள் தொகுதியை சுற்றி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 45 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணிநேரமும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இருப்பினும், வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக வைத்திருந்ததாக கூறி, ரூ.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து, அவை தவறான தகவல் எனவும், யாரும் அதனை நம்ப வேண்டாம் எனவும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி விளக்கம் அளித்துள்ளார். மேலும், ஆர்.கே.நகர் தேர்தலுக்கான சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா, பார்வையாளர்கள் அத்தொகுதியில் நடத்திய ஆய்வு குறித்த அறிக்கையை தலைமை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க நேற்று டெல்லி சென்றது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.