ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கடைசிகட்ட பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. ஆர்.கே.நகரில் வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், நாளையுடன் (செவ்வாய் கிழமை) தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது.
அதிமுக வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருது கணேஷ், சுயேட்சையாக களமிறங்கும் டிடிவி தினகரன் ஆகியோர் இறுதிகட்ட பிரச்சாரத்தில் மும்முரமாகியுள்ளனர்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சந்தேக மரணம், அதிமுக ஆட்சியின் முறைகேடுகள், அதிமுகவின் உட்கட்சி பூசல் உள்ளிட்டவற்றை எடுத்துக்கூறி, திமுக தேர்தல் பிரச்சாரம் செய்துவருகிறது. அதேபோல், டிடிவி தினகரன் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆர்.கே.நகருக்கு செய்வதாக உறுதியளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனிடையே, ஆளும் அதிமுக வாக்காளர்களுக்கு கணிசமான தொகையை வழங்கி ஓட்டுகளை விலைக்கு வாங்குவதாக புகார் எழுந்துள்ளது. ஒரு வாக்காளருக்கு ரூ.6,000 என, ஒரேநாளில் 120 கோடி ரூபாய் அளவுக்கு பணத்தை வாரி இறைத்ததாக குற்றச்சாட்டு உள்ளது.
மேலும், டிடிவி தினகரன் ஆதரவாளர்களிடம் இருந்தும் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு அதிமுக பணத்தை வழங்குவதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ராவிடம், திமுக புகார் அளித்திருந்தது. இதையடுத்து, சூழலை பொறுத்து ஆர்.கே.நகரில் தேர்தலை ரத்து செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என விக்ரம் பத்ரா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.