ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தவர்கள் மீது வழக்குப்பதியாமல், தொகுதிக்கு மீண்டும் தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் என, அத்தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்விற்கு மாற்றி நீதிபதி உத்தரவு. வழக்கு விசாரணைக்கு வரும் வரை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்காது என நம்புவதாக நீதபதி கருத்து.
ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது அ.தி.மு.க தினகரன் தலைமையில், பன்னீர்செல்வம் தலைமையில் என இரு அணிகளாக இருந்தன. அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் தினகரனும், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிட்டனர். தி.மு.க. சார்பில் மருது கணேஷ் போட்டியிட்டார்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 7 ம் தேதி வருமான வரித் துறை அதிகாரிகள், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்கள் என, 21 இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு 89 கோடி ரூபாய் பண பட்டுவாடா செய்ததாக தெரியவந்தது. இந்த பண பட்டுவாடா காரணமாக தேர்தல் நடக்க இருந்த மூன்று நாட்களுக்கு முன், தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
தற்போது, டிசம்பர் இறுதிக்குள் தேர்தலை நடத்த இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் அறிவிக்க தடை கோரி தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த மனுவில், பண பட்டுவாடாவில் ஈடுபட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல், தேர்தலை அறிவிக்க கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். மேலும், வருமான வரித் துறை அறிக்கையின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் எவர் பெயரையும் குறிப்பிடவில்லை. முறையாக புகார் அளித்திருந்தால் அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கும். இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை தமிழக தேர்தல் அதிகாரியும், தொகுதி தேர்தல் அதிகாரிகளும் புறக்கணித்துள்ளனர் எனக் குற்றம் சாட்டிள்ளார்.
இந்த தேர்தலுக்காக 5 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மருதுகணேஷ், தேர்தல் ரத்து செய்ததற்காக இழப்பீடு பெறுவதற்கு தனக்கு உரிமை உள்ளதாகவும், தேர்தல் ரத்தாகக் காரணமானவர்கள் சுதந்திரமாக உலா வருவதாகவும், இதுசம்பந்தமாக தான் அளித்த மனுவை பரிசீலிக்காமல் தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகவும், எனவே தேர்தலில் பணபட்டுவாவை தடுக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கும் வகையில் விதியை உருவாக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி கே. ரவிசந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பின்னர் உத்தரவிட்ட நீதிபதி ஏற்கனவே ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் தொடர்பாக வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வில் உள்ளது எனவே இந்த வழக்கையும் தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வுக்கு மாற்றுவதாகவும் உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணை வரும் வரை ஆர்.கே.நகர் தொடர்பான தேர்தல் தேதியை ஆணையம் அறிவிக்காது என நம்புவதாக நீதிபதி கருத்து தெரிவித்தார்.