ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்தும் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பிரவின் நாயரை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மறைந்த ஜெயலலிதா போட்டியிட்டு ஜெயித்த தொகுதி ஆர்.கே.நகர். அவர் மறைந்ததையடுத்து அந்த தொகுதி காலியாக உள்ளது. இந்த தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் வாக்களர்களுக்கு பணம் கொடுத்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் வரும் 21ம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் வெளியிடப்பாடு, தொகுதியில் தலைவர்கள் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர். வெளி மாவட்டங்களில் இருந்தும் அனைத்து கட்சியினரும் தொகுதிக்குள் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேட்புமனுத்தாக்கலின் போது, நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்தார். வேட்புமனு பரிசீலனையின் போது, விஷால் மனுவை முன்மொழிந்த 2 பேர் நாங்கள் கையெழுத்திடவில்லை என சொன்னதாக அந்த மனுவை நிராகரிப்பதாக அறிவித்தார். விஷால் நேரில் ஆஜராக, சம்பந்தப்பட்ட இருவரும் ஆளும் கட்சியினரால் மிரட்டப்படுள்ளதாக வாதாடினார். ஆடியோ ஒன்றையும் ஆதாரமாக வெளியிட்டார். முதலில் ஒப்புக் கொண்ட தேர்தல் அதிகாரி வேலுச்சாமி, நள்ளிரவில் மனுவை தள்ளுபடி செய்ததாக தெரிவித்தார்.
இது குறித்து மாநில தேர்தல் அதிகாரியிடம் விஷால் புகார் கொடுத்தார். திமுக உள்பட அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் தேர்தல் அதிகாரியை மாற்றவேண்டும் என கோரிக்கை வைத்தனர். மாநில தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, ‘வேட்புமனுவை நிராகரிப்பதாக எழுத்துப்பூர்வமாக சொல்லாமல் வாய் மொழியாக சொன்னது தேர்தல் நடத்தும் அதிகாரி செய்த தவறுதான்’ என தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமியை மாற்றுவதாகவும், அவருக்கு பதிலாக பிரவின் நாயர் ஐஏஎஸ் என்பவரை நியமிப்பதாகவும் அறிவித்துள்ளது, தேர்தல் கமிஷன்.
கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது திமுக சார்பில் ஐஏஎஸ் அதிகாரியை தேர்தல் அதிகாரியாக நியமிக்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். அப்போது தேர்தல் கமிஷன் சார்பில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர், பிரவின் நாயர்.