ஆர்.கே.நகர் பண பட்டுவாடா விவகாரம் தொடர்பாக புதிய வழக்கு பதிய உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
சென்னை, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) தொகுதிக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக வருமான வரித்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
தேர்தல் அதிகாரியின் புகாரின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெயர் குறிப்பிடாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டதால், இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திமுக வேட்பாளர் மருதுகணேஷ், வழக்கறிஞர் வைரகண்ணு ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் தரப்பில் ரகசிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, வருமான வரித்துறை அளித்த 34 பக்க அறிக்கையின் அடிப்படையில் தான் தேர்தல் ஆணையம், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்தது. அதன் அடிப்படையில் புகார் அளித்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெயரைக் குறிப்பிடாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஆவணங்களை ரகசிய ஆவணங்களாக வைக்க முடியாது. முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பெயர் குறிப்பிட்டுள்ள முக்கியமான அந்த ஆவணத்தை வெளியிட வேண்டும் என வாதிட்டார்.
மேலும், பணபட்டுவாடா தொடர்பான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால் புதிய வழக்கை பதிவு செய்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் வாதிட்டார்.
தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தேர்தல் ஆணையமோ, மனுதாரரோ மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றார்.
இதற்கு திமுக தரப்பு வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவித்தார்.
அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கில் சிபிஐ யை எதிர்மனுதாரராக சேர்த்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 12க்கு தள்ளிவைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.