முன்னாள் அமைச்சரும், திரைப்பட தயாரிப்பாளரும் எம்.ஜி.ஆரின் அன்பைப் பெற்றவரும், மூத்த அரசியல் தலைவருமான ஆ.எம். வீரப்பன் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். அவருக்கு வயது 98.
மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருவரின் அமைச்சரவைகளிலும் அமைச்சராகப் பதவி வகித்தவர் ஆர்.எம். வீரப்பன். திரைப்படத் தயாரிப்பாளராகவும் அரசியல்வாதியாகவும் வெற்றிகரமாக வலம் வந்தவர் ஆர்.எம். வீரப்பன். வயது மூப்பு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
ஆர்.எம்.வீ என்று அழைக்கப்படும் ஆர்.எம்.வீரப்பன், புதுக்கோட்டை மாவட்டம், வல்லதிராக்கோட்டை கிராமத்தில் பிறந்தவர். எம்.ஜி.ஆரின் அன்பைப் பெற்ற ஆர்.எம். வீரப்பன், எம்.ஜி.ஆர். 1953-ம் ஆண்டில் தொடங்கிய எம்.ஜி.ஆர் நாடக மன்றம், எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு நிர்வாக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். பின்னர் 1963-ம் ஆண்டில் சத்யா மூவிஸ் என்ற பெயரில் ஆர்.எம்.வீரப்பன் திரைப்பட நிறுவனம் ஒன்றை தொடங்கினார்.
எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை தொடங்கும் போது ஆர்.எம். வீரப்பன் அவருக்கு உறுதுணையாக இருந்தார். எம்.ஜி.ஆரின் அன்புக்குரியவராகவும் நம்பிக்கையைப் பெற்றவராகவும் அ.தி.மு.க-வில் செல்வாக்கு மிக்க தலைவராக ஆர்.எம். வீரப்பன் வலம் வந்தார். 1984-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். உடல் நலக்குறைவால் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாத போது, ஆர்.எம். வீரப்பன் தேர்தல் பிரச்சாரங்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டார்.
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர், அ.தி.மு.க இரண்டாக பிளவுபட்டபோது, அதிகப்படியாக 98 எம்.எல்.ஏக்.களின் ஆதரவுடன் எம்.ஜி.ஆரின் மனைவி வி.என். ஜானகியை முதலமைச்சராக்கியதில் ஆர்.எம்.வீரப்பன் முக்கியப் பங்கு வகித்தார்.
ஜெ. அணி, ஜா. அணி இணைந்து அ.தி.மு.க ஒன்றுபட்டதோது ஜெயலலிதா உடன் இணைந்து அ.தி.மு.க.வில் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆர்.எம். வீரப்பன் 2 முறை சட்டப்பேரவைக்கும், 3 முறை சட்ட மேலவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆர்.எம். வீரப்பன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், உள்ளாட்சி துறை அமைச்சர், இளைஞர் நலன் மற்றும் கல்வித்துறை அமைச்சர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என இருவரின் அமைச்சரவைகளிலும் அமைச்சராக அலங்கரித்தவர்.
மூத்த அரசியல் தலைவர் ஆர்.எம். வீரப்பன் வயது மூப்பு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த நிலையில், மூச்சு திணறல் காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 98. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“