தமிழ்நாட்டில் உள்ள 10 ரயில் அஞ்சல் அலுவலகங்கள் மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை எம்.பி சு. வெங்கடேசன் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியாவின் ரயில் அஞ்சல் அலுவலகங்கள் இந்திய மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தவை. கடைசி நிமிடத்தில் தபால் அனுப்ப விரும்புபவர்கள் கூட ரயில் நிலையத்திற்கு ஓடிச் சென்று சேர்த்து விடுவது இந்திய மக்களின் இனிமையான அனுபவங்கள்.
தனியார் மயமும், தனியார் கூரியர்கள் வருகையும் இந்திய அஞ்சல் துறையை நோக்கி தொடர்ந்து தாக்குதல்கள் தொடுத்து வருகின்றன. படிப்படியாக மக்களை தனியார் நோக்கி தள்ளுகிற வேலையை ஒன்றிய அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது.
அத்தாக்குதல்களின் ஒரு பகுதியாக ஆர்.எம்.எஸ் பதிவு அஞ்சல் அலுவலகங்களையும், விரைவு அஞ்சல் அலுவலகங்களையும் ஒன்றாக இணைக்க போவதாக இந்திய அஞ்சல் துறை 17.10.2024 ஆணையின் மூலம் அறிவித்து இருக்கிறது. இரண்டு சேவைகளும் வெவ்வேறு நோக்கங்களுக்காக வெவ்வேறு வகையிலான வாடிக்கையாளர்களுக்காக உருவாக்கப்பட்டவை.
இரண்டையும் இணைப்பது எந்த வகை வாடிக்கையாளர்களுக்கும் பயனளிக்காது. குறிப்பிட்ட சேவை மீதான கூர் கவனத்தையும் பாதிக்கும். சாமானிய மக்கள் மீது சுமையையும், வேகமான சேவை விரும்புகிற வாடிக்கையாளர்களுக்கு தாமதத்தையும் உருவாக்குகிற முடிவாகும் இது.
இந்தியா முழுவதும் 93 அலுவலகங்கள் மூடப்படும் என்றும் அதில் 10 அலுவலகங்கள் தமிழ்நாட்டில் உள்ளது என்றும் அறிய வருகிறோம். ஆகவே உடனடியாக தலையிட்டு இம்முடிவை நிறுத்த வேண்டும் என்று ஒன்றிய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய எம்.சிந்தியா அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
இந்திய அஞ்சல் துறைக்கு எதிராகவும், தனியார் கூரியர் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் " என்று சு. வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தி உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“