சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி பிரபுபாத்தின் 150வது திருவருகை நினைவேந்தல் மற்றும் உலக வைஷ்ணவ மாநாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், ’500 ஆண்டுகளுக்கு முன்னர் ‘திராவிட தேசம்’ என்று அழைக்கப்படுகிற தென் பகுதியில்தான் பக்தி தோன்றியது. நாயன்மார்களும், ஆழ்வார்களும் சிவன், விஷ்னு குறித்தான பாடல்கள் மூலமும் பக்தியை பரப்பினர்.
ராமானுஜ ஆச்சாரியாரால்தான் இங்கிருந்து வடக்குப் பகுதிக்கு பக்தி பரவியது.
தர்மத்தை பாதுகாக்கவும் தர்மத்தின் மூலம் உருவாக்கப்பட்ட பாரதத்தை பாதுகாக்கவும்தான் அனைத்து மகான்களும் தோன்றினார்கள். பாலில் இருந்து வெண்மையை தனியாக பிரிக்க முடியாதது போன்று இந்து தர்மத்தையும் பாரதத்திடமிருந்து பிரிக்க முடியாது. சனாதன தர்மமின்றி பாரத நாட்டை கற்பனையாக கூட நினைத்துப் பார்க்க முடியாது.
13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இஸ்லாமிய படையெடுப்பில், இந்து மடங்கள் அழிக்கப்பட்ட போது இந்து தர்மம் தாக்குதலுக்குள்ளானது. அடுத்த 300 ஆண்டுகளில் அதே நிலை நீடித்தது.
தர்மம் தாக்குதலுக்குள்ளான போதெல்லாம் நாடு முழுவதும் பக்தி இயக்கங்கள் தலையெடுத்தன. இந்து தர்மம் தாக்குதலுக்குள்ளாகும் போது பாரதமும் ஆக்கிரமிக்கப்பட்டது. அடுத்த 300 ஆண்டுகளில் பிரிட்டிஷாரின் படையெடுப்பின் போதும் இந்நிலத்தின் இந்து தர்மம் அழிக்கப்பட்டது.
தற்போதும், நாட்டில் சமூகத்தால் பிரித்து வைக்கப்பட்ட மக்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிப்பதில்லை, தீண்டாமை உள்ளது.
கார்டியா மிஷன் பல்வேறு நலப்பணிகளை செய்து வருகிறது. தலித் மக்களின் குடியிருப்புகளிலும் கார்டியா மிஷன் செயல்பட வேண்டும். அவர்களை வெளிக்கொணர வேண்டும். அதுதான், முழுமையான செயல்முறை, என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“