EVR Periyar Salai : சென்னை மத்திய ரயில்நிலையம் அருகே உள்ள மெட்ரோவில் வைக்கப்பட்டிருக்கும் பெயர் பலகையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் தற்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பெரியார் சாலையா அல்லது கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடா என்று கேள்வி எழுப்பிய போது, வெகுநாட்களாகவே அதிகாரப்பூர்வ பதிவுகளின் படி கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் சாலை என்ற பெயர் தான் உள்ளது என்று மாநில நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது.
பெரியார் நூற்றாண்டு விழாவை ஒட்டி 1979ம் ஆண்டு அன்றைய முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன், முன்பு பூந்தமல்லி சாலை என்ற பெயரில் வழங்கப்பட்ட சாலையை பெரியார் சாலை என்று மாற்றினார்.
சாலையின் பெயர் மாற்றத்தை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். யாரின் வேண்டுகோளுக்கு இணங்க பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்று கேள்வி எழுப்பிய முக ஸ்டாலின், பெயர் மாற்றத்திற்கு உடனே உத்தரவிட வேண்டும் இல்லையென்றால் மே 2ம் தேதிக்கு பிறகு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறினார்.
அஇஅதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது சாலைக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அரசுகள் 40 வருடங்களாக மாற்றி மாற்றி தமிழகத்தை ஆட்சி செய்த போதிலும் கூட அந்த சாலையின் பெயர் அப்படியே இருந்தது என்று கூறினார். மதிமுக பொதுச்செயலாளர் வைக்கோ, நெடுஞ்சாலைத்துறையை கையில் வைத்திருப்பவர்கள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வருக்கு கண்டனத்தை பதிவு செய்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil