திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை அடுத்தடுத்து 4 ஏ.டி.எம் மையங்களில் கொள்ளை நடைபெற்றது. ஏ.டி.எம்களில் புகை வருவதாக அவ்வழியாக சென்றவர்கள் காவல்துறையில் புகார் அளித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது 4 ஏ.டி.எம் இயந்திரங்களும் கேஸ் வெல்டிங் மெஷின் கொண்டு உடைக்கப்பட்டு ரூ. 70 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், அங்கிருந்த சி.சி.டி.வி கேமராக்களும் எரிந்து கிடந்துள்ளதால் கொள்ளையர்களைப் பிடிப்பதில் சவால் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. கடந்த 3-ம் தேதி இதேபோல் பெங்களூரு மாநிலம் கே.ஜி.எஃப் (கோலார் தங்க வயல்) பகுதியில் உள்ள ஒரு எஸ்.பி.ஐ ஏ.டி.எம் வங்கியில் கொள்ளை நடைபெற்றுள்ளது. அங்கும் கேஸ் வெல்டிங் மெஷின் மூலம் இயந்திரம் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
அந்த கொள்ளை சம்பவத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளும், திருவண்ணாமலை ஏடிஎம்மில் கொள்ளையடிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளும் ஒத்துப்போவதாக போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு கொள்ளை சம்பவங்களைப் பார்க்கும் போது அரியானாவைச் சேர்ந்த கொள்ளை கும்பல் இந்த சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து 2 தனிப்படை போலீசார் ஏ.டி.எம் கொள்ளை சம்பவம் தொடர்பாக அரியானா புறப்பட்டு சென்றுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/