Trichy Lalitha Jewellery Robbery : தமிழகத்தில் பல்வேறு கிளைகளுடன் லலிதா ஜுவல்லரி இயங்கி வருகிறது. இதன் திருச்சி கிளை நகைக்கடையின் பின்பக்க சுவரில், ஆள் நுழையும் அளவுக்கு துளையிட்டு ரூ.13 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. முகமூடி அணிந்து கைவரிசை காட்டிய கொள்ளையரை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வழக்கம் போல் இன்று காலை ஒன்பது மணிக்கு கடையின் முன்பக்க கதவை திறந்தபோது அதன் கீழ்தளத்தில் உள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இந்த சம்பவத்தை நேற்று காலையில் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனே போலீசுக்கு தகவல் அளிக்க, விரைந்து வந்த காவல்துறையினர் உள்ளே சென்று பார்வையிட்டபோது பின்புற சுவற்றில் ஓட்டை போட்டு அதிலிருந்து கடைக்குச் சென்று கொள்ளையர்கள் அங்கிருந்த முதல் தளத்தில் மட்டும் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளை அடித்து இருப்பது தெரிய வந்தது.
கிட்டத்தட்ட தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் நகைகள் கொள்ளை போயிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
கொள்ளை சம்பவம் குறித்து திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடை உரிமையாளர் கிரண்குமார் கூறுகையில், நகைக்கடையில் இருந்த தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாகவும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு ரூ13 கோடி என்றும் தெரிவித்துள்ளார்.
Trichy Lalitha Jewellery Robbery
மேலும், கடையில் உள்ள சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த காட்சியில் விலங்குகளின் முகமூடிகளை அணிந்த இரு நபர்கள் திருடும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அவர்களின் மொபைல் நெட்ஒர்க் பற்றியும் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
நள்ளிரவு 2.11 மணி முதல் காலை 3.15க்குள் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது என்று தெரிய வந்திருக்கிறது.
லலிதா ஜுவல்லரி கடையின் பின்புற சுவற்றில் துளையிட்டு தான் கொள்ளையர்கள் உள்ளே சென்றிருக்கின்றனர்.
இந்த பின்புற சுவரும் அங்கே இருக்கும் பள்ளியின் சுவரும் ஒன்றே ஆகும். அந்த பள்ளிக்கு இது விடுமுறை காலம் என்பதால், பகல் நேரத்தில் கூட அது பூட்டியே இருந்திருக்கிறது.
இந்த சூழலை பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள், பள்ளி வாயிலாகவே பின்புறமாக வந்து, சுவற்றை துளையிட்டு உள்ளே நுழைந்திருக்கிறார்கள். இத்தனைக்கும் கடையின் முன்பக்கம் பாதுகாவலர்கள் இருந்தும், கொள்ளையர்கள் சத்தமின்றி துளையிட்டு இருக்கின்றனர். பின்புறம் சிசிடிவி ஒன்று இருந்திருக்கிறது. ஆனால், அதில் இரு கொள்ளையர்களும் பதிவாகவில்லை. மிகத் தெளிவாக திட்டம் தீட்டி, இந்தக் கொள்ளைச் சம்பவத்தை இரு கொள்ளையர்கள் அரங்கேற்றி இருக்கின்றனர்.
இந்நிலையில், கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 3 தனிப்படைகள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் என்றும் 4 தனிப்படைகள் நகை கொள்ளையர்களை பிடிக்க அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, கொள்ளை நடந்த இடத்தில் துப்பறியும் நாய் சோதனைக்கு விடப்பட்டது. அது முதல் தளத்தில் சுற்றி சுற்றி வந்தது. பின்னர் கடைக்கு பின்புறம் துளையிடப்பட்ட இடத்துக்கும் சென்று சுற்றி வந்தது. இதையடுத்து கல்லூரி மைதானத்தில் நாய் படுத்துக்கொண்டது. கைரேகை நிபுணர்கள் தரைதளம் மற்றும் முதல் தளம், சுவரில் துளையிடப்பட்ட இடங்களில் தடயங்களை சேகரித்தனர்.
நகைகடையின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, 2 கொள்ளையர்களின் உருவம் பதிவாகி இருந்தது. இருவரும் குழந்தைகள் விளையாட்டுக்காக அணியும் சிங்க முகம் கொண்ட முகமூடியை ஒரு நபரும், மற்றொருவர் முயல் பொம்மை முகமூடியையும் அணிந்திருந்தனர்இது குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகை கடையில் கொள்ளையடித்தது வட மாநில கொள்ளையராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே திருச்சியில் ஏற்கனவே கைவரிசை காட்டிய வடமாநில கொள்ளையர்களின் விவரங்கள், குறிப்புகளை சேகரித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.