/indian-express-tamil/media/media_files/2025/03/18/pJuYb4p60WJoBXUopLEG.jpg)
திருச்சியில், வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள பாலாஜி நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் திருச்சி மாநகராட்சியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஸ்ரீதர் தனது வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். வெளியூருக்கு சென்றிருந்த ஸ்ரீதரின் மனைவி முத்துச்செல்வி வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 22 பவுன் தங்க நகை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
அதே பகுதியில் உள்ள ராயர் தோப்பில் குடியிருப்பவர் செல்வகுமார். வேளாண்மைத் துறையில் ஓட்டுனராக வேலை பார்த்து வரும் இவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் கும்பகோணம் கோயிலுக்கு சென்றுவிட்டார். பின்னர், மறுநாள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 35 பவுன் நகை மற்றும் பூஜை அறையில் இருந்த வெள்ளி பொருட்களை திருடிக் சென்றது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்த போலீசார், சம்பந்தப்பட்ட வீடுகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், கொள்ளிடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அமிர்தா நகரைச் சேர்ந்த கார்த்திகைவேல், ஆனந்த் ஆகிய இருவரும், தாங்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவை உடைத்து திருட முயற்சி நடந்ததாக காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
இப்படி அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி - க. சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.