முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்த கடலூர் திமுக எம்.பி ரமேஷிடம், இன்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகில் பணிக்கன் குப்பம் என்ற இடத்தில் திமுக எம்.பி டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ்க்கு சொந்தமான முந்திரி ஆலை அமைந்துள்ளது. இங்கு வேலை செய்த கோவிந்தராசு என்ற பாமக நிர்வாகி கடந்த செப். 19ஆம் தேதி இரவு மர்மமான முறையில் மரணமடைந்தார்.
அவரை எம்.பி.யும், அவரது ஆட்களும் தாக்கிக் கொலை செய்துவிட்டார்கள் என்று கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும், இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தத்தைத் தொடர்ந்து, இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
சிபிசிஐடி விசாரணையில், கோவிந்தராஜ் அடித்து கொலை செய்யப்பட்டது உறுதியானதையடுத்து, எஸ்.ரமேஷ் உள்பட 6 பேர் மீது 302 (கொலை) உள்பட 6 பிரிவுகளின் கீழ் கடலூர் சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
முதற்கட்டமாக எம்.பி ரமேஷின் உதவியாளர் நடராஜன், தொழிலாளர்கள் அல்லா பிச்சை(53), சுந்தர் என்கிற சுந்தர்ராஜ்(31), வினோத்(31), கந்தவேல்(49) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, எம்.பியை உடனடியாக கைது செய்யவேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதற்கிடையில், நேற்று முன்தினம் கடலூர் எம்.பி. ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். பொறுப்பு நீதிபதி கற்பகவள்ளி அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். கடலூர் மத்திய சிறைச்சாலையில் எம்.பி ரமேஷூக்கு முதல் வகுப்பு சிறை அறை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய சிபிசிஐடி மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், தொழிலாளர் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் எம்.பியின் பங்கு இருந்ததா என்பது இதுவரை தெரியவில்லை. இவ்விவகாரம் குறித்து எம்.பி-யிடம் விரிவான விசாரணை நடத்திய பிறகு முடிவுக்கு வரமுடியும். உயிரிழந்த தொழிலாளியின் மகன், சென்னையில் தினசரி கூலிக்கு வேலை செய்பவர். தந்தை இறந்ததாக தகவல் கிடைத்ததும், அவர் எம்.பி மற்றும் கூட்டாளிகள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஏனென்றால், முதலில் கோவிந்தராசு விஷம் அருந்தி தற்கொலை செய்ததாக கூறப்பட்டது. ஆனால், அவரது உடலில் காயங்கள் இருந்ததால், இயற்கையான மரணம் அல்ல என புகார் அளித்துள்ளார். புகாரில் எம்.பி ரமேஷின் பெயர் குறிப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் சரணடைவதற்கு முன்பு எம்.பி ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துவதாகவும், என் மீதான குற்றச்சாட்டைப் பொய் என நிரூபிப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil