ரூட் தல விவகாரத்தில் 30 மாணவர்களை நிரந்தரமாக நீக்க கோரி மாநிலக் கல்லூரி முதல்வருக்கு ரயில்வே போலீஸ் இன்று(நவ.1) கடிதம் அனுப்பியுள்ளது. சென்னையில் பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் புறநகர் ரயில்களில் ரூட் தல பிரச்சனைகளில் ஈடுபட்டு, அவ்வப்போது மாணவர்களிடையே அடிதடி தாக்குதல்களும், ஆயுதங்கள் கொண்டு தாக்குதல்களும் நடைபெற்று வருகிறது. இதில் ரயிலில் பயணிக்கும் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
ரயில்வே போலீஸ் அவ்வப்போது நேரடியாக கல்லூரிகளுக்குச் சென்று ரயில்களில் ரூட் தல பிரச்சனையில் ஈடுபடும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர். போலீசார் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தும், நடவடிக்கை எடுத்து வந்தாலும் மாணவர்களிடையே இந்த பிரச்சனை ஓய்ந்த பாடில்லை.
இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் ரயில் நிலையங்களில் மாணவர்களிடையே மோதல் தொடர்பாக 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 44 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 மாதத்திற்கு முன் மோதலில் ஈடுபட்ட மாநிலக் கல்லூரி மாணவர்கள் 15 பேரும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 10 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தொடர்ந்து ரயில் நிலையங்கள், ரயிலில் பிரச்சனையில் ஈடுபட்டு வரும் மாநிலக் கல்லூரி மாணவர்கள் 30 பேரைக் கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்க ரயில்வே போலீஸ் மாநிலக் கல்லூரி முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“