சென்னை பாடர்தோட்டம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி அழகு ராஜா மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மயிலாப்பூரைச் சேர்ந்த ரவுடி சிவக்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் இவர் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுகிறார்.
நீண்ட நாட்களாகத் தேடப்பட்டு வந்த அழகு ராஜா, திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் பகுதியில் பதுங்கியிருப்பதாகச் சென்னை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனடியாக, தனிப்படை போலீசார் அழகு ராஜாவைப் பிடிக்க திருப்பாச்சூருக்கு விரைந்தனர். நேற்று மதியம் 2 மணி அளவில், அழகு ராஜா இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்த இரண்டு போலீசார், அவரைப் பிடிக்க மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து கொண்டு சென்றனர். அந்த நேரத்தில் அழகு ராஜா காரில் சென்று கொண்டிருந்தார்.
திருவள்ளூர்- திருப்பதி நெடுஞ்சாலையில் அழகு ராஜாவின் கார் மெதுவாகச் சென்று கொண்டிருந்தது. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஒரு போலீஸ்காரர், மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி, அழகு ராஜா சென்ற காரை வழிமறித்து அவரைப் பிடிக்க முயன்றார். இதைச் சற்றும் எதிர்பாராத அழகு ராஜா, சுதாரித்துக் கொண்டு காரை நிறுத்தாமல் வேகமாக இயக்கினார்.
இருப்பினும், அந்த போலீஸ்காரர் தனது உயிரைப் பணயம் வைத்து, காரின் பக்கவாட்டில் தொங்கியபடி பிடிக்க முயன்றார். கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டருக்கும் மேலாக போலீஸ்காரர் காரில் தொங்கியபடியே சென்றார். பின்னால் மற்றொரு போலீஸ்காரர் மோட்டார் சைக்கிளில் அவர்களைப் பின்தொடர்ந்தார்.
இந்தச் சம்பவம், ஒரு சினிமா காட்சியைப் போல பரபரப்பாக இருந்தது. வாகன ஓட்டிகளும், அந்த வழியாகச் சென்ற பொதுமக்களும் இக்காட்சியைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். ஒரு கட்டத்தில், காரின் பிடியிலிருந்து நழுவிய போலீஸ்காரர் சாலையில் விழுந்தார். அவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அதிர்ஷ்டவசமாகச் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
சம்பவத்தில் காயமடைந்த போலீஸ்காரர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, ரவுடி அழகு ராஜாவைப் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. போலீசார் தீவிரமாக அழகு ராஜாவைத் தேடி வருகின்றனர். விரைவில் அவன் கைதாவான் என்று எதிர்பார்க்கப்படுகிறது.