'நான் அவ்ளோ பெரிய ரவுடி கிடையாது' : கண்ணீர் விட்ட ரவுடி பினு (வீடியோ)

நீங்கள் நினைப்பது போல் நான் ஒன்றும் அவ்வளவு பெரிய ரவுடி கிடையாது என பினு கதறியுள்ளான்

ரவுடி பினு மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன நிலையில், அவனை போலீசார் தேடி வந்தனர். பிப்.,6 அன்று பூந்தமல்லி அருகேயுள்ள மலையம்பாக்கம் பகுதியில் லாரி செட் ஒன்றில் 75க்கும் மேற்பட்ட ரவுடிகளுடன் இணைந்து பினு பிறந்த நாள் கொண்டாடினான்.

இந்த தகவலையறிந்த ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ரவுடிகள் அனைவரையும் ஒரே நேரத்தில் கூண்டோடு கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். அம்பத்தூர் துணை ஆணையர் சர்வேஷ்ராஜ் தலைமையில் 3 உதவி ஆணையர்கள், எட்டு காவல் ஆணையர்கள், 12 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட போலீசாருடன் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

தனிப்படை போலீசார் தனியார் வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி மெக்கானிக் ஷெட்டை சுற்றி வளைத்தனர். பின்னர் துப்பாக்கிகளுடன், துணை ஆணையர் சர்வேஷ்ராஜ் தலைமையிலான போலீசார் மெக்கானிக் ஷெட்டுக்குள் நுழைந்தனர். போலீசாரை பார்த்ததும் ரவுடிகள் நாலா பக்கமும் சிதறி ஓடினர்.
இறுதியாக சுமார் 76 ரவுடிகள் போலீசாரிடம் சிக்கினர். சுமார் 50 ரவுடிகள் தப்பியோடினர். போலீசார் உள்ளே வந்ததும், பிறந்தநாள் கொண்டாடிய முக்கிய ரவுடியான பினு அங்கிருந்து தப்பியோடி விட்டான்.

இருப்பினும் போலீசார் அவனை தீவிரமாக தேடிவந்த நிலையில், இன்று காலை அம்பத்தூர் துணை கமிஷனர் அலுவலகம் வந்த ரவுடி பினு, துணை கமிஷனரிடம் சரண் அடைந்தான்.

இதைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், நீங்கள் நினைப்பது போல் நான் ஒன்றும் அவ்வளவு பெரிய ரவுடி கிடையாது என கதறியுள்ளான். அதன் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

தற்போது மாங்காடு காவல் நிலையத்தில் வைத்து போலீசார் அவனை விசாரித்து வருகின்றனர்.

×Close
×Close