காவல்துறை சென்னையில் ரவுடிகளை குறிவைத்து தூக்கி வருகிறது. அந்த வரிசையில் வடசென்னை ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது ரவுடி காக்கா தோப்பு பாலாஜிக்கு கை மற்றும் காலில் முறிவு ஏற்பட்டது.
சென்னையில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க முடிவு செய்த காவல்துறை அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. முதல்கட்டமாக மத்திய சென்னையில் பல கொலை, ஆட்கடத்தல் அழக்குகளில் தொடர்புடைய ரவுடி சிடி மணியை அண்மையில், தேனாம்பேட்டையில் போலீசார் கைது செய்தனர். அப்போது, ரவுடி சிடி மணிக்கும் போலிசாருக்கும் இடையே நடந்த மோதல் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
சென்னையில் சிடி மணியைத் தொடர்ந்து, வட சென்னையில் மிரட்டலாக வலம் வந்த காக்கா தோப்பு பாலாஜியை கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர்.
சென்னையில் உள்ள ஏழு கிணறுதான் காக்கா தோப்பு பாலாஜியின் சொந்த ஊர். வட சென்னை ரவுடி நாகேந்திரன் வலது கரமாக செயல்பட்டு வந்த காக்கா தோப்பு பாலாஜி போலீசாரிடமும் செல்வாக்கு இருந்துவந்திருக்கிறது. போலீசாரின் சில அசைன்மெண்ட்களையும் செய்து முடிக்கும் அளவுக்கு இருந்துள்ளான்.
வடசென்னையில் முக்கிய ரவுடிகளில் ஒருவனாக வலம் வந்த காக்கா தொப்பு பாலாஜி மீது 7 கொலை வழக்குகள், ஆள்கடத்தல் வழக்குகள், கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. சென்னையில் போலீசார் ரவுடிகளைக் குறிவைத்துள்ளார்கள் என்பதைத் தெரிந்துகொண்ட காக்கா தோப்பு பாலாஜி போலீசாரிடம் இருந்து தப்பிக்க முடிவு செய்து விழுப்புரத்திற்கு சென்று பதுங்கி இருந்துள்ளான். இதனைத் தெரிந்துகொண்ட போலீசார், விழுப்புரத்தில் காக்கா தோப்பு பாலாஜி மறைந்திருந்த இடத்திற்கு சென்ற்அ போலீசார் அவனை அங்கே சுற்றி வளைத்தனர். அப்போது, போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற காக்கா தோப்பு பாலாஜிக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு தப்பிக்க முடியாமல் சிக்கியுள்ளான். காக்கா தோப்பு பாலாஜியை மடக்கிப் பிடித்த போலீசார், அங்கிருந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எலும்பு முறிவுக்கு மாவு கட்டு போட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை பெருநகர மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால், “சென்னையில் ரவுடிகள் அட்டகாசத்தை ஒடுக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன; 16 ரவுடிகள் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
சிடி மணியைத் தொடர்ந்து சென்னையின் டாப் ரவுடிகளில் ஒருவரான காக்கா தோப்பு பாலாஜியை போலிசார் சுற்றி வளைத்து கைதுசெய்தது. அப்போது தப்பிக்க முயன்றதால் ரவுடியின் கை கால் முறிந்தது. கை கால் முறிந்த ரவுடியை சென்னைக்கு தூக்கி வந்து மாவுக்கட்டு போட்டு சிறையில் அடைத்திருப்பது ரவுடிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"