பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5-ம் தேதி அவருடைய வீட்டுக்கு வெளியே 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை வைத்தன.
இதையடுத்து, சென்னை மாநகரக் காவல் ஆணையராக அருண் ஐ.பி.எஸ் நியமணம் செய்யப்பட்டார். சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி-யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டு, பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் உள்ள 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்த செம்பியம் போலீசார், 7 நாட்கள் காவல் கேட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடும் என்பதனால் காணொளி காட்சி மூலம் விசாரணை நடத்தப்பட்டு ஆம்ஸ்ட்ராங் கொலையில் சம்பந்தப்பட்ட 11 பேரிடமும் 5 நாட்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து ஜூலை 11-ம் தேதி 11 பேரையும் காவலில் எடுத்த செம்பியம் போலீசார், பரங்கிமலையில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி திருவேங்கடம் கைதான நிலையில், விசாரணைக்கு அழைத்துச்சென்றபோது தப்பிச்சென்று புழல் பதுங்கியிருந்தபோது, அவரைப் பிடிக்கச் சென்ற போலீசார் சுற்றி வளைக்கும்போது, பதுக்கி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளார், அப்போது தற்காப்புக்காக போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் ரவுடி திருவேங்கடம் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி திருவேங்கடம், ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடையவர் என போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங்க் கொலையாளிகளில் ஒருவரான ரவுடி திருவேங்கடத்தை போலீசார் விசாரணைக்காக ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) காலை புழல் நோக்கி அழைத்துச் சென்றுள்ளனர். மாதவரம் ஆடுதொட்டி அருகே செல்லும்போது திருவேங்கடம் போலீசாரின் பிடியில் இருந்து தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து, கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு அவரை தேடும்போது, புழல் பகுதியில் உள்ள வெஜிடேரியன் நகரில் உள்ள தகரக் கொட்டாயில் திருவேங்கடம் பதுங்கி இருந்துள்ளார்.திருவேங்கடத்தைப் பிடிக்க போலீசார் சுற்றிவளைக்கும்போது, திருவேங்கடம் அங்கு ஏற்கெனவே பதுக்கி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து திருவேங்கடம் சுட்டுள்ளார். இதையடுத்து, தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் தனது துப்பாக்கியால் ரவுடி திருவேங்கடத்தை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் திருவேங்கடத்தின் வயிறு மற்றும் மார்பில் குண்டு பாய்ந்துள்ளது. மாதவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
ரவுடி திருவேங்கடம் பதுங்கியிருந்த தகரக் கொட்டாயில்தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கான சதி திட்டமிடப்பட்டதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கின்றனர்.
மேலும், என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி திருவேங்கடம், பெரம்பூரில் உணவு டெலிவரி பாய் போல, 10 நாட்களாக சுற்றி வந்து ஆம்ஸ்ட்ராங்கைக் கண்காணித்து கொலை திட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் என்று போலீசார் தகவல் தெரிவித்தனர்.
2015-ம் ஆண்டு நடந்த ஆம்ஸ்ட்ராங்கின் நண்பர் தென்னரசு கொலை வழக்கிலும் திருவேங்கடத்திற்கு தொடர்பு இருந்துள்ளது என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் ரவுடி என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“