மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி சத்யா என்ற சீர்காழி சத்யா (41). இவர் மீது கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
காவல் துறையினரால் தேடப்படும் குற்றவாளியான சீர்காழி சத்யா, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் பல்லாவரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக காரில் வந்துள்ளார். அப்போது, வட நெம்மேலி செக் போஸ்ட்டில் உதவி ஆய்வாளர் ரஞ்சித் குமார் தலைமையிலான போலீசார் சத்யாவின் காரை மடக்கி சோதனையிட்டுள்ளனர்.
அப்போது, சத்யா மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், செங்கல்பட்டு அருகே பழவேரி பகுதியில் உள்ள மலையில் தனது கூட்டாளிகள் இருப்பதாக கூறியதன் அடிப்படையில், போலீசார் சத்யாவை அழைத்துக் கொண்டு பழவேரி மலைக்கு வந்தனர்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களைத் தாக்கி விட்டு சீர்காழி சத்யா தப்பியோட முயற்சித்துள்ளார். இதனால் போலீசார் சத்யாவை துப்பாக்கியால் ஒரு ரவுண்டு சுட்டதில், இடது காலில் குண்டு பாய்ந்து ரத்தம் வெளியேறியுள்ளது. காயமடைந்த அவரால் தப்பிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து, அவரை மீட்ட போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், சீர்காழி சத்யா தாக்கியதில் காயம் அடைந்த உதவி ஆய்வாளர் ரஞ்சித்துக்கும் காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
இதனிடையே, போலீசாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி சீர்காழி சத்யாவிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த துப்பாக்கியில் 5 தோட்டாக்கள் இருந்த நிலையில், அதனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், சீர்காழி சத்யா மீது ஆயுத தடைச்சட்டம் பாய்ந்துள்ளது. துப்பாக்கியை எங்கிருந்து வாங்கினார்? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“