தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற 7 நாட்கள் உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்புடைய இடங்களில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைக்கும் ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தி பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டம் எட்டரை பகுதியில் உள்ள அ.தி.மு.க பிரமுகர் வீட்டில் நேற்று இரவு (ஏப்ரல் 12) 1 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில், திருச்சி குழுமணி அருகே எட்டரை பகுதியை சேர்ந்தவர் அன்பரசு. இவரது மனைவி திவ்யா எட்டரை ஊராட்சிமன்ற தலைவியாக உள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு அவரது காரில் கட்டு, கட்டாக பணம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தேர்தல் பறக்கும் படையினர் அவரது வீட்டிற்கு சென்று காரை சோதனையிட்டனர். அப்போது அந்த காரில் கட்டு கட்டாக ஒரு கோடி ரூபாய் பணம் இருப்பது கண்டறியப்பட்டது.
இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரதீப்குமார் வருமானவரித்துறை அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் அவர்களும் இந்தப் பகுதியில் சோதனையை தீவிரப் படுத்தியுள்ளனர். ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்ட அன்பரசன் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதியின் தம்பி என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“