மிக்ஜாம் புயல் தாக்கத்தால் சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் ஏற்பட்ட பெருமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவிடும் பொருட்டு, திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.1 கோடி மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்களை 8 லாரிகள் மூலம் திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் சென்னைக்கு வழியனுப்பி வைத்தார்.
இந்தநிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் தெரிவித்ததாவது: சமீபத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் தொடர் மழை காரணமாக சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் பெரும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சரின் துரித நடவடிக்கைகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை விரைந்து மீட்டெடுக்கப்பட்டு வருகிறது. நமது திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பால் பவுடர் பாக்கெட்டுகள், ரஸ்க், சேமியா, பிரட், டூத் பிரஸ், பேஸ்ட், சோப்புகள், உணவுபொருட்கள், குடிநீர் பாட்டில்கள், பாய்கள், துணிமணிகள், போர்வைகள், எவர் சில்வர் தட்டுகள், நாப்கின்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சுமார் ரூ.1கோடி மதிப்பில் 8 வாகனங்கள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
இதேபோல், முதற்கட்டமாக திருச்சி மாநகராட்சி சார்பிலும், சென்னையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களான அரிசி, மளிகை பொருட்கள், போர்வைகள், ,பிஸ்கட் பாக்கெட்டுகள், பிரட், மருந்து பொருட்கள், குடிநீர் பாட்டில்கள், கோதுமை மாவு ,நாப்கின் போன்ற பொருள்களை மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் ஆகியோர் அனுப்பி வைத்தனர்.
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி துணை மேயர் ஜி.திவ்யா, நகரப் பொறியாளர் பி. சிவபாதம், மண்டலத் தலைவர்கள் துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன், பி.ஜெயநிர்மலா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
நேற்றிரவு திருச்சியில் இருந்து அனுப்பப்பட்ட சுமார் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் இன்று காலை சென்னையை சென்றடைந்தது. மேலும், திருச்சியில் இருந்து சென்ற துப்புரவுப்பணியாளர்கள் இன்று காலை முதல் ஊரப்பாக்கம் பகுதிகளில் துப்புரவுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மழைநீர் தேங்கிய ஊரப்பாக்கம் பகுதியில் டன் கணக்கில் சேர்ந்துள்ள குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“