தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலை தொகுதி தி.மு.க வேட்பாளர் சி.என். அண்ணாதுரையை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (மார்ச் 26) இரையூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது. இப்போது வரை இதில் 1 கோடியே 16 லட்சம் மகளிர் பயனடைந்துள்ளனர். இதில் சில குறைபாடுகள் உள்ளன. இந்த திட்டத்திற்கு 1.60 கோடி விண்ணப்பித்திருந்தனர். இதில் சிலருக்கு கிடைத்தது, சிலருக்கு கிடைக்கவில்லை என்ற குறைபாடுகள் சொல்கின்றனர். இந்தநிலையில், தேர்தல் முடிந்தபின் இந்த குறைகள் களையப்பட்டு, விண்ணப்பித்த அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். இது என்னுடைய உறுதி மொழி என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், அண்ணாதுரையை கடந்த முறை விட அதிகமாக 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். ஜுன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை, ஜுன் 3-ம் தேதி கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள். அவருக்கு 40-க்கு 40 தொகுதியை வெற்றி பெற்று கொடுக்க வேண்டும். இதைவிட கலைஞருக்கு பிறந்நாள் பரிசு கொடுக்க முடியுமா? என்று கேட்டு உதயநிதி வாக்கு சேகரித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“