/indian-express-tamil/media/media_files/3aKUxHwCnxrhklWCH527.jpg)
கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி. அலுமினிய வியாபாரியான இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் வசித்து வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் கண்ணனுக்கு தொழில் ஒப்பந்தம் அடிப்படையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான அலுமினிய பொருட்களை ரவி அனுப்பி வைத்துள்ளார். பல மாதங்கள் கடந்தும் கண்ணன் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இது குறித்து ரவி ஏற்கனவே போலீசாரிடம் புகார் அளித்துள்ள நிலையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே கண்ணனின் ஊரைச் சேர்ந்த அ.ம.மு.க பிரமுகராக (அம்மா மக்கள் முன்னேற்ற கழக, எம்.ஜி,ஆர் மன்ற மாநில துணை செயலாளர்) உள்ள பூலோக பாண்டியன் என்பவர் ரவிக்கு அறிமுகமாகியுள்ளார்.
அப்போது பூலோக பாண்டியன், வியாபாரி ரவியிடம், கண்ணனின் சொத்துகள் அடமானத்தில் உள்ளதாகவும், ரூ. 13 லட்சம் கொடுத்தால் சொத்துக்களை மீட்டு விற்பனை செய்து கொடுத்து உங்களது முழு பணத்தையும் கண்ணனிடம் வாங்கி தருகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய ரவி, பூலோக பாண்டியனிடம் இரண்டு தவணைகளில் 13 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். ஆனால் பணத்தைப் பெற்றுக் கொண்ட பூலோக பாண்டியன், கண்ணனிடமிருந்து பணத்தை பெற்று தரவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து ரவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் அ.ம.மு.க பிரமுகர் பூலோக பாண்டியன் தலைமறைவானார். கடந்த 6 மாதங்களாக போலீசார் அவரை தேடி வந்த நிலையில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் பூலோக பாண்டியனை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் பூலோக பாண்டியன் தூத்துக்குடியில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரிய வந்ததையடுத்து செல்வபுரம் காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் தூத்துக்குடி விரைந்தனர்.
தூத்துக்குடியில் பதுங்கி இருந்த பூலோக பாண்டியனை செல்வபுரம் போலீசார் கைது செய்து கோவை அழைத்து வந்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.