சென்னையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.42 கோடி பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து 3 பேரை பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை யானைக்கவுனி பகுதியில் தனியார் அலுவலகம் ஒன்றில் பெரிய அளவில் ஹவாலா பணப் பரிமாற்றம் நடைபெறுவதாக யானை கவுனி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் பூக்கடை உதவி ஆணையர் உள்ளிட்ட தனிப்படை போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அலுவலக அறையில் பையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த மூன்று பேரையும் போலீசார் பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். பணத்தை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், பணத்தை வைத்திருந்தது யாசர் அராபத் மற்றும் அதனை பெற்றுக் கொள்ள வந்தது குணா ஜெயின் என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து யாசர் அராபத்திடம் நடைபெற்ற விசாரணையில், ராமநாதபுரத்தை சேர்ந்த ஒருவர் சொல்லும் கட்டளைக்கு ஏற்ப அந்த நபர்களிடம் பணத்தை கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்ததாகவும், இப்போது குணா ஜெயின் என்பவருக்கு பணம் கொடுக்க இருந்ததாகவும் தெரியவந்தது.
இதையடுத்து யானை கவுனி போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து பிடிப்பட்டவர்களை வருமான வரித்துறை அலுவலகம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“