பட்டாசு விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ 2.76 கோடி வழங்க உத்தரவு

பள்ளிப்பட்டில் 2009ம் ஆண்டு நடந்த பட்டாசு விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.2.76 கோடி இழப்பீடு வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அடுத்த பள்ளிப்பட்டு பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 32 பேரின் குடும்பத்துக்கு 2.76 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த இழப்பீட்டு தொகையை தமிழக அரசும், பட்டாசு கடையின் உரிமையாளரும் சமமாக பங்கீட்டு(50%) வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டில், கடந்த 2009 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி சோளிங்கர் சாலையில் உள்ள ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஆனந்தகுமார் என்பவர் பட்டாசு கடை அமைத்து இருந்தார். பண்டிக்கைக்கு முந்தைய தினமான அக்டோபர் 16 ஆம் தேதி மாலை பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த நிகழ்வு தொடர்பாக பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்கு தமிழக அரசு குழு அமைத்தது. சம்பவ இடத்தில் ஆய்வு நடத்திய மாவட்ட வருவாய் அதிகாரி (டி.ஆர்.ஓ) கடை அமைப்பதற்கு உரிய உரிமத்தை கடையின் உரிமையாளர் பெறவில்லை என, அரசிடம் அறிக்கை அளித்தார். இந்த விபத்தில் உயிரிழந்த 32 பேருக்கும் தமிழக அரசு தலா ஒரு லட்சம் இழப்பீடு வழங்கியது. இவர்களில் 27 பேர் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுக்கு ஆந்திர அரசும் ஒரு லட்சம் இழப்பீடு வழங்கியது.

இந்த நிலையில், பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறி, அவர்களின் வாரிசுகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் நடைபெற்றது. அப்போது உரிமம் இல்லாமல் கடை நடத்த அனுமதித்ததன் மூலம் மாவட்ட நிர்வாகம் கடமை தவறிவிட்டது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இதை மறுத்த அரசுத்தரப்பு, ஏற்கனவே முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ஒரு லட்சம் வழங்கப்பட்டுள்ளது என வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களுக்கு பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,’’விபத்து நடைபெற்ற இடத்தில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் தொடர்பான பரிவர்த்தனை நடந்துள்ளது. எந்தவித அசம்பாவித நிகழ்வுகளும் நடைபெறாமல் இருக்க பொது மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட சூழ்நிலையை வழங்கும் பொறுப்பு உள்ளது. இவற்றிலிருந்து அரசும், கடையின் உரிமையாளரும் தப்பித்து கொள்ள முடியாது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவையை கருத்தில் கொள்ளவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இந்த நிகழ்வை பொருத்தமட்டில், அரசு இயந்திரம் பொறுப்புணர்வுடன் செயல்படவில்லை என்பது நிரூபணமாகிறது.

ஆகையால், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர்களின் வயது மற்றும் அப்போதைய அவர்களின் மாத வருமானம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு 6.15 லட்சம் ரூபாய் முதல் ரூ.17.75 வரை இழப்பீட்டை 6 சதவீத வட்டியுடன் பெற தகுதியுள்ளனர். மொத்த இழப்பீட்டு தொகையான ரூ.2 கோடியே 76 லட்சத்து 56 ஆயிரத்தை மூன்று மாதங்களுக்குள் தமிழக அரசும், கடை உரிமையாளரும் சரிசமமாக பங்கீட்டு(50 சதவீதம்) வழங்க வேண்டும்’’ எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close