திருச்சி விமான நிலையத்தில் விமான பயணி ஒருவரிடம் சுங்கத்துறை மற்றும் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ. 23 லட்சம் மதிப்பிலான சவுதி ரியால் பறிமுதல் செய்தனர்.
திருச்சி விமான நிலையத்திலிருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதும் அதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகளும், மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும், திருச்சி விமான நிலையத்தில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. இதே போல் வெளிநாட்டு கரன்சி மற்றும் அரியவகை ஆமை, பாம்பு, பல்லிகள் கடத்தி வருவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் நேற்று இரவு திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏர் ஏசியா விமானம் மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட தயாராக இருந்தது. இதில் பயணிக்கவிருந்த விமான பயணிகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது திருச்சியைச் சேர்ந்த ராம்பிரபு என்பவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை தனியே அழைத்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் 23 லட்சம் மதிப்பிலான சவுதி ரியால் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தனர்.
திருச்சியில் கடந்த சில மாதங்களாகவே விமான பயணிகள் தொடர்ந்து தங்கம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தொடர்ந்து கடத்தி வருவது தொடர்கதையாகவே இருப்பதும், இங்கு பறிமுதல் செய்யப்படும் தங்கம், வெளிநாட்டு கரன்சிகள் விமான நிலைய பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க. சண்முகவடிவேல்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"