திருச்சி எ.புதூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப் பொருட்கள் ஆட்டோவில் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் கிராப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
Advertisment
அப்போது அவ்வழியே வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது, சந்தேகப்படும்படியாக இருந்த 11 மூட்டைகளை கண்டுபிடித்து அதை இறக்கி ஆய்வு செய்தனர். அந்த ஆட்டோவில் கொண்டு வரப்பட்ட மூட்டைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் ஹான்ஸ் 105 கிலோ, விமல்- 83 கிலோ மற்றும் கூல்லிப் - 30 கிலோ என சுமார் ரூ.1,40,000 மதிப்புள்ள 218 கிலோ போதைப் பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்து அந்த பொருட்களையும் ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேற்படி கடத்தலில் ஈடுபட்ட சாதிக் பாட்ஷா, அப்துல் காதர், முகமது ஷெரீப் ஆகியோர் மீது எடமலைபட்டிபுதூர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், விசாரணையில் குட்கா பொருட்களை தில்லைநகர் காவல்நிலைய எல்லைப் பகுதியில் இருந்து காரில் பதுக்கி வைத்திருந்து எடுத்து வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இனாம்தார் தோப்பு பகுதியில் வாகன சோதனை செய்தபோது சந்தேகப்படும்படியாக காரின் அருகில் நின்றுகொண்டிருந்த ஜெயராமன், ஜாகுபார் சாதிக் ஆகியோரை தில்லை நகர் போலீசார் விசாரணை செய்தனர்.
Advertisment
Advertisements
அவர்கள் பயன்படுத்திய இரண்டு சொகுசு கார்களையும் சோதனை செய்தபோது அதில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் ஹான்ஸ்-195 கிலோ, விமல்- இரண்டரை கிலோ, ஆர்.எம்.டி- 2 கிலோ, கூல்லிப் -13 கிலோ என மொத்தம் ரூ.1,60,000 மதிப்புள்ள குட்கா பொருள்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு இருசக்கர வாகனமும், ரூ.22,000 ரொக்கப் பணம் மற்றும் 1 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போதைப் பொருள் கடத்திய 5 பேரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்ற காவலில் அடைத்தனர். மேலும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவர்களை அதிரடியாக பிடித்த தனிப்படை காவல் அதிகாரிகள் மற்றும் போலீசாரை திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா வெகுவாக பாராட்டினார்.
அதே நேரம் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தடை செய்யப்பட்ட பான் மசாலா தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இது திருச்சிக்கு எங்கிருந்து வந்தது, எப்படி வந்தது, இதற்கான முக்கிய பிரமுகர்கள் யார் யார் என்பதை இதுவரை கண்டறியாமலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது. ஆகவே, இப்படியான சம்பவங்களில் தொடர்புடைய பான் மசாலா தயாரிப்பாளர்கள், மொத்த விற்பனையாளர் போன்றவர்களை கைது செய்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“