திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், சார்ஜா, அபுதாபி, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது.
இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று சார்ஜாவிலிருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமாக நடந்து கொண்ட ஆண் பயணியை தீவிரமாக சோதித்ததில், அவர் தன் உடைக்குள் கம்பி வடிவில் 501 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு, 30 லட்சம் ரூபாய். அந்த பயணியை கைது செய்து, சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, மலேஷியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று திருச்சி விமான நிலையம் வந்த பயணியரை, குடியேற்றத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
சோதனையில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பாலு 55, குத்புதீன் 47 ஆகிய இருவரும், போலி ஆவணங்கள் மூலம் எடுத்த பாஸ்போர்ட்டில் வந்தது தெரிந்தது. இதனை அடுத்து அந்த இருவரையும் விமான நிலைய போலீசாரிடம் விமான நிலை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
அவர்களை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். அதேபோல, வளைகுடா நாடுகளில் ஒன்றான மஸ்கட்டில் இருந்து வந்த, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த நேரு 55 என்பவரும், போலி ஆவணங்கள் மூலம் எடுத்த பாஸ்போர்ட்டில் வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவரும் கைது செய்யப்பட்டார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“