வரி ஏய்ப்பு செய்ததாக சந்தேகிக்கப்படும் அரக்கோணம் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் அடையாறில் உள்ள வீடு, அலுவலகம், சில கல்வி நிறுவனங்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அக்.5ஆம் தேதி சோதனை நடத்தினர்.
இதுதவிர பூந்தமல்லியில் உள்ள ஒரு கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஆவடி அருகே உள்ள பட்டாபிராமில் உள்ள ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது.
இந்த வீடு பூட்டியிருந்ததால் அந்த வீட்டின் பூட்டை உடைத்து அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். மேலும் ஜெகத்ரட்சகனின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரது வீடுகள் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், “கல்லூரிகளில் இருந்து ரூ.400 கோடி மதிப்பிலான கணக்கில் வராத கட்டண ரசீதுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேபோல், தவறான தகவல்கள் அளித்து ரூ.25 கோடி ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன” எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், “கணக்கில் காட்டாத ரூ.300 கோடி, அறக்கட்டளைக வங்கி கணக்கில் இருந்து தனிப்பட்ட கணக்குகளுக்கு மாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
தொடர்ந்து, கணக்கில் வராத ரூ.32 கோடி ரொக்கமும். ரூ.28 கோடி மதிப்புள்ள தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“