சென்னை தாம்பரத்தில் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது. இந்த பணத்துக்கு முஸ்தபா என்பவர் உரிமை கோரியிருந்த நிலையில், விசாரணையில் ரூ.4 கோடி முஸ்தபாவுக்கு சொந்தமானது இல்லை என்பது அம்பலமாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் 6-ம் தேதி மக்களவைத் தேர்தல் நேரத்தில், பறக்கும் படை அதிகாரிகள் தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் குளிர் சாதன பெட்டியில் நடத்திய அதிரடி சோதனையில் 4 கோடி ரூபாய் பணம் கட்டுக்கட்டாக சிக்கியது. பணத்துடன் பிடிபட்ட 3 பேரையும் தாம்பரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த பணம் லோக்சபா தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 15க்கும் மேற்பட்டோரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை செய்துள்ளனர்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 4 கோடி ரூபாய்க்கும் எனக்கும் தொடர்பு இல்லை என்றும் யாராவது புகார் கொடுக்கட்டும். எனக்கு கவலை இல்லை. அந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று நெல்லையில் பா.ஜ.க வேட்பாளராக போட்டியிட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இந்நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பறிமுதல் செய்யப்பட்ட தன்னுடையது என்று முஸ்தபா என்பவர் உரிமை கோரி இருந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ரயில்வேயில் கேண்டீன் நடத்தி வந்த முஸ்தபா என்ற நபர், தேர்தல் பறக்கும் படையினரால் தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரசில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4 கோடி பணம் தன்னுடையது என்று உரிமை கோரினார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் நடத்திய விசாரணையில், அவர் இந்த பணத்துக்கு மோசடியாக உரிமை கோரியது தெரியவந்தது. இந்த பணம் அவருக்கு சொந்தமானது இல்லை என்று கண்டுபிடித்த சி.பி.சி.ஐ.டி போலீசார், முஸ்தபாவுடன் யார் யார் எல்லாம் தொடர்பில் இருக்கிறார்கள் என்ற பட்டியலை எடுத்து விசாரிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“