இந்திய அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த மிகவும் பழமை வாய்ந்த ரயில்வே பணிமனைகளில் திருச்சி பொன்மலையும் ஒன்று. இந்த பணிமனையில் இருந்துதான் டார்ஜிலிங், ஊட்டி போன்ற மலைப்பாதைகளில் பயணிக்கக்கூடிய மலை ரயில்களுக்கான ரயில் என்ஜின்கள், பயணிகள் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. உலகளவில் மலைப்பாதைகளில் பயணிக்க கூடிய ரயில் என்ஜின் மற்றும் பெட்டிகளை தயாரித்து வரும் நிறுவனத்தில் பல்வேறு ஊழல்கள், முறைகேடுகள் நடந்தேறி வருகிறது. அப்படி ஒரு சம்பவம் இங்கும் அரங்கேறியிருக்கின்றது.
அதாவது, திருச்சி பொன்மலை பலகட்ட பாதுகாப்பு மிகுந்த ரயில்வே தொழிற்சாலையில் ரூ.50 லட்சத்திற்கும் மேல் மதிப்புடையை ரயில் என்ஜின் ட்ராக்சன் மோட்டாரை லாரியில் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
இதுதொடர்பாக 2 பேரை ரயில்வே போலீசார் கைது செய்ததுடன், இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய ரயில்வே பாதுகாப்புப் படை காவல் ஆய்வாளர் உள்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளது.
திருச்சி பொன்மலையில் மத்திய அரசின் நிறுவனமான ரயில்வே பணிமனை இயங்கி வருகிறது. இங்கு தமிழகம் மற்றும் வடநாட்டினை சேர்ந்த சுமார் 7 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு டீசல் என்ஜின் பராமரிப்பு, டெமு இன்ஜின் பராமரிப்பு, பயணிகள் ரயில் பெட்டிகள் பாடி கட்டுதல், உலகப்புகழ் பெற்ற மலைப்பாதைகளில் பயன்படுத்தப்படும் நிலக்கரி, நீராவி ரயில் என்ஜின்கள், சரக்கு ரயில் முழு உற்பத்தி என பல்வேறு பணிகள் இந்தத் தொழிற்சாலையில் தான் செய்யப்படுகின்றது.
இதற்காக உதிரி பாகங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலகட்ட பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகளுடன் இந்த ரயில்வே பணிமனைக்கு தேவையான உதிரி பாகங்கள் லாரிகளில் தினந்தோறும் கொண்டு வரப்படுவது வழக்கம். அதேபோல் தொழிற்சாலையில் இருந்து உதிரி பாகங்களை வெளியே கொண்டு செல்வதும் வழக்கம்.
இந்த நிலையில் ரயில்வே பாதுகாப்புப்படை ஆய்வாளர் தலைமையிலான ரயில்வே போலீசார் கடந்த 4 நாட்களுக்கு முன்பு இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொன்மலை கேந்திர வித்யாலயா பள்ளி அருகே மர்மமான முறையில் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. அந்த லாரியை பாதுகாப்புப்படை ஆய்வாளர் மற்றும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் ரயில் என்ஜினுக்கு பயன்படுத்தப்படும் மின்மோட்டார் ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரயில்வே போலீசார், அந்த லாரியில் இருந்த 2 பேரிடம் விசாரித்தபோது தொழிற்சாலையில் இருந்து மின் மோட்டாரை கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. அந்த மின் மோட்டாரின் மதிப்பு சுமார் ரூ.50 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது சம்பந்தமாக கோபால் (வயது 30), மணிகண்டன்(29) ஆகிய 2 பேரையும் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது ரயில்வே தொழிற்சாலையில் தூய்மை பணி நடந்து வருவதாகவும், அங்கு இவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்த்து வருவதாகவும், இதனால் தினமும் லாரிகளில் தொழிற்சாலைகளில் இருக்கும் தேவையற்ற குப்பை மற்றும் மணலை அள்ளிக் கொண்டு வெளியே கொட்ட வருவதாகவும், அப்படி வந்தபோது மின் மோட்டாரை லாரியில் வைத்து மேலே மணலை கொட்டி கொண்டு வந்ததாகவும், அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இது குறித்து ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரை தேடி வருகின்றனர். இதுகுறித்து அதிர்ச்சியடைந்த ரயில்வே நிர்வாகம், இந்த வழக்கில் மின் மோட்டார் திருடு போனது குறித்து அலட்சியமாக இருந்ததாக கூறி ரயில்வே பாதுகாப்புப்படை ஆய்வாளர் கிரண், உதவி ஆய்வாளர் வெங்கடாசலம், காவலர் சதீஷ்குமார் ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டிருக்கின்றது.
இதுகுறித்து பணிமனையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தெரிவிக்கையில், தென்னிந்தியாவில் பிரசித்திப் பெற்றது பொன்மலை ரயில்வே பணிமனை. இந்தப் பணிமனை சுமார் 200 ஏக்கருக்கும் மேல் நிலப்பரப்பை கொண்டது. ஆங்கிலேயர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட இந்தப் பணிமனை மிகுந்த, சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. சுற்றுச்சுவர் மிகவும் அகலமானதாகவும், பிரம்மாண்டமானதாகவும் கருங்கற்களாலும், கண்ணாடி துகல்களாலும், முல்வேளியை கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டது.
இப்படியான பணிமனையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ரயில்வே பாதுகாப்புப்படை வீரர்கள் ஆய்வு செய்யவும், வாகனத்தில் ரோந்து செல்லவும், காம்பவுண்டை சுற்றி வரவும் பணிமனை உள்ளேயும் வெளியேயும் தனி சாலை வசதியும் உண்டு. இப்படி பலகட்டப் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட பணிமனையில் இருந்து விலைமதிப்பற்ற பல பொருட்கள் அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால் எளிதாக பணிமனையில் இருந்து வெளியே செல்வது வேதனைக்குரியதாக இருக்கின்றது.
இந்தப் பணிமனையில் 10 நாள் இடைவெளியில் எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜின்களும், 15 நாள் இடைவெளியில் பாசஞ்சர் என்ஜின்களும், 45 நாள் இடைவெளியில் சரக்கு என்ஜின்களும் சுத்தம் செய்வதற்கும், தொழில் நுட்ப கோளாறுகளை சரி செய்வதற்கும் வந்து செல்கின்றது. அதேபோல் டெமு ரயில்களுக்கும் முழு பராமரிப்புகள் இங்கே செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல் கூட்ஸ் வண்டிகள் முழு ஸ்டைன்லஸ் ஸ்டீலுடன் இங்கு வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இவைகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் மிகுந்த விலை மதிப்புடையது.
இந்தநிலையில், எங்கள் பணிமனையில் இருந்து பல டன் எடையுடனை ரயில் என்ஜின்களில் பயன்படுத்தக்கூடிய பல வாட் மின் உற்பத்தியை கொடுக்கக்கூடிய ட்ராக்சன் எனப்படும் மின் மோட்டார்கள் லாரிகளில் வெளியே சென்றது பெரும் அதிர்ச்சியாக இருக்கின்றது. இந்த மோட்டார்களை ஓரிடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற பிரம்மாண்ட க்ரைன்கள் உதவி தேவைப்படும். பணியாளர்கள் தேவைப்படும், ரயில் என்ஜின் பராமரிப்பு இடத்தில் இருந்து க்ரைன் மூலம் எடுத்துச்சென்றால் அப்பகுதியிலுள்ள ஊழியர்களின் ஒத்துழைப்பும், அதிகாரிகளின் ஒத்துழைப்பும் கட்டாயம் அவசியமாகிறது. பெயரளவுக்கு சிலரை தண்டிக்கும் ரயில்வே நிர்வாகம், பணிமனையின் அதிகார வர்க்கத்தினை கண்டுகொள்ளாதது எப்படி.
இந்தநிலையில் பணிமனையில் இருந்து ட்ராக்சன் மோட்டார் எப்படி வெளியே சென்றது என்பது புரியாத புதிர்தான். இந்த கடத்தலுக்கு கட்டாயம் பணிமனையில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள், பாதுகாப்புத்துறையை சேர்ந்த அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் வெளியே கடத்த முடியாது. கடத்தலுக்கு பணிமனைக்கு உள்ளேயும், வெளியேயும் காண்ட்ராக்ட்காரர்களின் கைங்கரியமும், கையூட்டும் நிறையவே பரிமாறப்பட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.
விலைமதிப்பற்ற பொருட்களை கையாளும் இந்தப் பணிமனையில் பணியாற்றும் நாங்கள் பணிமனைக்கு உள்ளே வாகனத்தில் வரக்கூடாது, அப்படியே அனுமதி பெற்று வரக்கூடிய வாகனங்களை பலகட்ட சோதனைகளுக்குப் பிறகுதான் உள்ளேயும், வெளியேயும் ஆர்பிஎப் வீரர்கள் அனுமதிக்கின்றனர் என்ற நிலையில் பல டன் எடையுடைய ரயில் என்ஜின் உந்துசக்திக்கு பயன்படுத்தப்படும் மின் மோட்டார் எப்படி வெளியே சாத்தியம், இதில் பெரும் ஊழல் நடந்திருக்க வாய்ப்பு என்றார் பல கேள்விக்கனைகளோடு. என்னதான் பாதுகாப்பு அம்சங்களை கொண்டதாக ஒரு பணிமனை இருந்தாலும் அதில் ஓட்டையப்போட்டு கொள்ளையடிப்பதில் எங்களுக்கு நிகர் யார் என்றவாறு கொள்ளையடிக்கும் கூட்டம் ஒரு பக்கம் அதை அன்றாட வழக்கமாக்கியிருப்பதை ரயில்வே நிர்வாகம் எப்படி கட்டுப்படுத்தப் போகின்றதோ?
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.