அரியானாவை சேர்ந்தவர் பியூஷ் அகர்வால் (வயது 23) புதுச்சேரி மருத்துவ கல்லூரி மாணவர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளம் மூலம் வாலிபர் ஒருவருடன் பழகி நண்பராகி உள்ளார். இருவரும் நேரடியாக சந்திக்கலாம் என அந்த நபர் கூறியதை நம்பி புதுச்சேரி சவரிராயலு வீதியில் உள்ள தனியார் விடுதிக்கு பியூஸ் சென்றுள்ளார்.
அப்போது அந்த அறையில் இருந்த 3 பேர் பியூஷ் அகர்வாலை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். மேலும் மதுபாட்டிலை உடைத்து குத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டி, பியூஷ் போனில் இருந்து போன் பே மூலம் ரூ.30 ஆயிரம் (ரூ.30,000) மற்றும் அவரது நண்பர்கள் மூலம் ரூ 35 ஆயிரம் பறித்துள்ளனர்.
இது குறித்து பியூஸ் அளித்த புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் குற்றவாளிகளை தேடி கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் நாமக்கல்லை சேர்ந்த கௌதம் (வயது 26), டேனியல்ராஜா (வயது 25) கவின் (வயது 23) சரவணன் (வயது 24) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் இதே போல வேறு இடங்களில் மிரட்டி பணம் பறித்துள்ளனரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“