இசைஞானி இளையராஜா பிரதமர் மோடி குறித்து எழுதிய கருத்து பற்றி திமுகவினர் யாரும் கருத்து கூறவில்லை. அதனால், மத்திய அமைச்சர் எல். முருகன் தேவையில்லாமல், திமுகவை வீண் வம்புக்கு இழுக்க வேண்டாம் என்று எச்சரிக்க விரும்புகிறேன் என்று திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி குறித்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தகம் ஒன்றுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அதில், இந்திய அரசியலமைப்பின் தலைமை சிற்பி டாக்டர் அம்பேத்கரையும் பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு எழுதியிருந்தார். இளையராஜாவின் இந்த கருத்துக்கு பலரும் சமூக ஊடகங்களில் எதிர்ப்பு தெரிவித்து அவரை கடுமையாக சாடியதால் சர்ச்சையானது.
இதற்கு, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கு ஆதரவானவர்கள், இசைஞானி இளையராஜாவை அவமதித்து வருகின்றனர். ஒரு அரசியல் கட்சிக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் விருப்பமில்லாத ஒரு கருத்தை தெரிவித்தார் என்பதற்காக இளையராஜாவை அவதிக்கலாமா? இது ஜனநாயகமா என்று கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்தார்.
இதனிடையே, இளையராஜா பிரதமர் மோடி குறித்த கருத்துக்காக அவர் மீது சமூக ஊடகங்களில் கடுமையாக தாக்குவது குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், திமுகவின் அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி, இளையராஜா சர்ச்சையில், மத்திய அமைச்சர் எல்.முருகன் தேவையில்லாமல் திமுகவை வம்புக்கு இழுக்க வேண்டாம் என்று எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி கூறியிருப்பதாவது: “பொறுப்புள்ள பதவியில் அமர்ந்துள்ள எல்.முருகன் பொறுப்பற்ற முறையில் செய்திகள் வெளியிடுவது அவருடைய அறியாமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
ஏற்கனவே கடந்த 80 ஆண்டு காலத்திற்கும் மேலாக திமுகவின் போர்வாளாக இயங்கி வரும் முரசொலி அறக்கட்டளை கட்டிடம் குறித்து, வேலூரில் இவர் பேசிய அவதூறு பேச்சு குறித்து, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நான் தொடர்ந்த வழக்கில், இவர் வருகிற ஏப்ரல் 22ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென்று, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
திமுக மீது அவதூறாக பேசுவதும் - கருத்து தெரிவிப்பதையும் எல்.முருகன் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
இசைஞானி இளையராஜா பிரதமர் மோடி குறித்து தெரிவித்த கருத்துக்கு திமுகவைச் சேர்ந்த யாரும் எவ்வித கருத்தும் தெரிவிக்கவும் இல்லை. தெரிவிக்க விரும்பவும் இல்லை. பிரதமர் மோடி குறித்து, இளையராஜா கருத்து சொல்வது எல்.முருகன் வாதத்தின்படி, எப்படி கருத்து சுதந்திரமாகுமோ அதைபோல், இளையராஜா அவர்களின் கருத்து குறித்து விமர்சனம் செய்திட, மற்றவர்களுக்கும் சுதந்திரம் உண்டு என்பதை எல்.முருகன் புரிந்து கொள்ள வேண்டும்.
தேவையில்லாமல், திமுகவை வீண் வம்புக்கு இழுக்க வேண்டாம் என்று எல்.முருகனை எச்சரிக்க விரும்புகிறேன்.
ஏற்கனவே, முரசொலி இடம் குறித்து தாங்கள் பேசியது குறித்து, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், ஒரு வழக்கினை தங்கள்மீது தொடர வழிவகுக்க வேண்டாம் என்றும், தங்களின் இப்போக்கை திருத்திக் கொள்ளாவிட்டால், திமுக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் என்பதனை எச்சரிக்கையாவும் – அறிவுரையாகவும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.