தி.மு.க.வின் முக்கிய பொறுப்பாளர்கள், வேட்பாளர்கள், அவர்களின் நண்பர்களின் செல்போன் உரையாடல்கள் அமலாக்க இயக்குநரகம் மற்றும் வருமான வரித்துறை மூலமாக ஒட்டு கேட்கப்படுவதாக தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு புகார் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்த் தேர்தல் 2024 நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி 1 தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் இந்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. பிரச்சாரம் செய்வதற்கு நாளை மாலை வரை மட்டுமே அவகாசம் என்பதால் அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பளாளர்கள் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தி.மு.க.வினரின் செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுவதாக என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி அளித்துள்ள புகாரில், “தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தி.மு.க.வின் முக்கிய பொறுப்பாளர்கள், வேட்பாளர்கள், அவர்களின் நண்பர்களின் செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன.
இந்த சட்டவிரோத செயலில் மத்திய அரசின் அமைப்புகளான அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன என நாங்கள் சந்தேகிக்கிறோம். எனவே, இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“