'மும்பை ரெட் லைட் ஏரியா மாதிரி நடத்துறாங்க': மீடியா மீது பாய்ந்த ஆர்.எஸ்.பாரதி

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலைஞர் வாசகவட்ட நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களை அநாகரிகமாக பேசியதாக வீடியோ வெளியானதைத் தொடர்ந்து அவருக்கு மாற்றத்திற்கான ஊடகவியாலாளர்கள் மையம் வன்மையான கண்டனம்...

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலைஞர் வாசகர் வட்டம் நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களை அநாகரிகமாக பேசியதாக வீடியோ வெளியானதைத் தொடர்ந்து அவருக்கு மாற்றத்திற்கான ஊடகவியாலாளர்கள் மையம் வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது.

கலைஞர் வாசகர் வட்டம் நிகழ்ச்சியில் பேசிய, திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய விவாத நிகழ்ச்சியில் பாஜக தலைவர் ஹெச்.ராஜா, திராவிட இயக்கத்தின் அஸ்தமனத்தில்தான் தமிழர்களின் விடிவு இருக்கிறது என்று கூறியதைக் குறிப்பிட்டு அவரை கடுமையாக விமர்சித்துப் பேசினார். தொடர்ந்து பேசிய, அவர், ”இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தில் ஒரு ஹரிஜன்கூட இதுவரை உயர் நீதிமன்ற நீதிபதியாக கிடையாது. ஆனால், தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகுதான் வரதராஜரை நீதிபதியாக உக்கார வைத்தார். அதற்குப் பிறகு, 7-8 ஆதிதிராவிட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் நீதிபதியாக இருந்தார்கள் என்றால் அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை. இன்றைக்கு மீண்டும் அவால்கள் உள்ளே நுழைந்துவிட்டார்கள். நான் ஒரு வக்கில்தான் என்றாலும் ஆதங்கமாக இருக்கிறது. கலைஞர் உயிரோடு இருந்திருந்தால் அவருடைய பேனா வேலை செய்திருந்திருக்கும். நாட்டிலே மிகப்பெரிய எழுச்சி உண்டாகியிருக்கும். தெரியாமல் பொய்சொல்கிறார்கள். மக்கள் கடவுளின் பெயரால் ஏமாறுகிறார்கள். திமுக காரர்கள் எல்லாம் இந்து மதத்துக்கு எதிரியைப்போல சொல்கிறார்கள். திமுககாரர்கள் கோயிலுக்கு போகவில்லையென்றால், ஐயருக்கே வருமானம் கிடையாது. இந்த மண்டபத்தில் அமர்ந்திருப்பவர்கள் பலர் தலையில் குங்குமம் இருக்கிறது விபூதி இருக்கிறது. என் கையில்கூட கயிறு இருக்கிறது. இதை சொல்ல வேண்டிய கட்டாயம். ஏதோ நாம் இந்துக்களுக்கு எதிரியைப் போல சொல்கிறார்கள்.” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஐயர் கோயிலுக்கு போனால் தட்டில் 5 ரூபாய் போடுவார். அதே திமுக வட்ட செயலாளர் கோயிலுக்கு போனால், அர்ச்சனை தட்டில், 100 ரூபாய் பெருமைக்காக போடுவார்கள். கவுன்சிலர் போனால் 500 ரூபாய் போடுவார். எம்.எல்.ஏ போனால் 1000 ரூபாய் போடுவார். நேரு போன்ற ஆட்கள் போனால் 5000 ரூபாய் போடுவார்கள். அதனால், நாம் போடும் பணத்தில்தான் அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

ஆனால், நாம் இந்துக்களுக்கு எதிரிபோல சொல்கிறார்கள். நாம் போடும் பணத்தில்தான் இந்துமதம் பரவிக்கொண்டிருக்கிறது.

கலைஞர் சொன்னார் நாம் இந்துக்கள்தான். கோயில் கட்டுவது நாம். பெயிண்ட் அடிப்பது நாம். ஆனால், இன்னும், கோயிலுக்குள் போகமுடியவில்லையே. இந்த நாட்டின் ஜனாதிபதியையே கோயிலுக்குள் விடவில்லையே. அதைத்தானே நாம் எதிர்க்கிறோம். அதை புரியவைக்க வேண்டியதுதானே நமது கடமை. அதற்குத்தான் இது போன்ற வாசகர் வட்டம் பயன்பட வேண்டும். இதற்குமேல் பேசினால், வார்த்தைகள் வேறு மாதிரி வந்துவிடும். இந்த பொறுப்பில் இருப்பதால் நான் பேசக்கூடாது என்று பார்க்கிறேன். அதிலும் திமுகவின் அமைப்புச் செயலாளர். இந்த பத்திரிகைக்காரர்களுக்கு வேற வேலை இல்லை. எவர் என்ன செய்தாலும் அதைப்பற்றி எழுதுவது கிடையாது. கெஜ்ரிவால் பிரசாந்த் கிஷோரை வைத்து தேர்தல் நடத்தினார். நரேந்திர மோடி பயன்படுத்தினார். அதை ஊடகங்களில் போடவில்லை. யார் யாரோ அவரை பயன்படுத்தினார்கள். அவர் தமிழ்நாட்டுக்குள் வந்து திமுகவுடன் வந்துவிட்டவுடன். வயித்தெரிச்சல் காரணமாக அதைப்பற்றியே பேசுகிறார்கள். இந்த டிவிகாரர்கள் இருக்கிறார்கள் பாருங்கள். அவர்களை மாதிரி உலத்திலேயே அயோக்கியர்கள் யாரும் கிடையாது. பம்பாயில் இருக்கிற ரெட்லைட் ஏரியா மாதிரி கம்பனியை நடத்துகிறார்கள். காசு வருகிறது என்ற காரணத்துக்காக எதைவேண்டுமானலும் தலைப்பாக்குவது. மு.க.ஸ்டாலின் கோயிலுக்கு போனாரா? அவர் மனைவி கோயிலுக்கு போனாரா? அது ஒரு விவாதம். அதுவா நாட்டுக்கு முக்கியம். இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டிய சக்தியாக இந்த கலைஞர் வாசகவட்டம் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.

ஆர்.எஸ்.பாரதியின் இந்த அதிரடிப் பேச்சு பல தரப்பில் இருந்தும் கண்டனங்களைப் பெற்றுள்ளது.


தொலைக்காட்சி ஊடகங்கள் மும்பையில் இருக்கிற ரெட்லைட் ஏரியா மாதிரி இருக்கிறது என்று கூறியது ஊடகவியலாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊடகவியலாளர்கள் பற்றி ஆர்.எஸ்.பாரதியின் இந்த அநாகரிகமான பேச்சுக்கு மாற்றத்திற்கான ஊடவியலாளர்கள் மையம் வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாற்றத்திற்கான ஊடவியலாளர்கள் மையம் தனது டுவிட்டர் பக்கத்தில், “திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, பத்திரிக்கையாளர்கள் குறித்து அநாகரீகமாக பேசியுள்ளதை வன்மையாக கண்டிகிறோம். இந்த கருத்தை அவர் திரும்பபெறுவதுடன், இதற்காக அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். கட்சியினர், இதுபோன்று பொறுப்பின்றி பேசக்கூடாது என மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளனர்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close