திருச்சி கிராப்பட்டி திமுக கலைஞர் நூற்றாண்டு பொதுக்கூட்டத்தில் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி பேசுகையில், “திமுக அரசை தமிழகத்திற்கு பெட்டி தூக்கிட்டு வந்தவன் குறை கூறினால் திமுக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது போடப்பட்டுள்ள வழக்கு அயோக்கியத்தனமானது. அவரை கைது செய்த போது மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன.
நீதிமன்றமும் நேற்று அதை உறுதி செய்துள்ளது. அவருக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டதால், அவர் உயிர் பிழைத்தார். இல்லையென்றால் அவர்கள் செய்த சித்திரவதையில் உயிரிழந்திருப்பார்.
அவருக்கு நாம் இரங்கல் தீர்மானம் தான் வாசித்திருக்க வேண்டியிருக்கும். அதில் இருந்து அவர் தற்போது தப்பித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் 70 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக அஜித் பவார் மீது வழக்கு உள்ளது. அவர் பா.ஜ.க விற்கு சென்ற உடன் அங்கே இருக்கும் ஆளுநர் அவருக்கு துணை முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
ஆனால் இங்கே உள்ள ஆளுநர் உயர் நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்ட ஒரு வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.
இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். செந்தில் பாலாஜி வழக்கில் இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்பு கூறினாலும், அவர்கள் இருவரும் அமலாக்கத்துறைக்கு கஷ்டடி கேட்க அதிகாரம் இல்லை என்பதை கூறி உள்ளார்கள்.
இதன் மூலம் அமலாக்கத்துறை, அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த முடியாது என்பது உறுதியாகிறது. தி.மு.க விடம் சட்ட ரீதியாக மோதியவர்கள் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை.
அது ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பியது முதல் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் வாங்கியது வரை திமுக சட்டப் போராட்டத்தில் வென்றுள்ளது. எங்களிடம் மோதி ஒரு போதும் யாரும் வெற்றி பெற முடியாது.
ஆளுநர் என்ன நிலைமைக்கு செல்ல போகிறார்கள் என்பது இன்னும் 10,15 நாட்களில் தெரியவரும். தி.மு.க தொண்டர்கள் கட்சிக்கு ஒரு சோதனை என்றால் பார்த்து கொண்டு அமைதியாக இருக்க மாட்டார்கள்.
முதலமைச்சர் பெங்களூரு சென்றால் தடுப்போம் என அண்ணாமலை கூறி உள்ளார். அண்ணாமலைக்கு துணிச்சல் இருந்தால் முதலமைச்சரை தடுத்து பார்க்கட்டும் என்று ஆர்.எஸ்.பாரதி சவால் விடுத்தார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“