விக்கிரவாண்டி எம்.எல்.ஏ மறைவை தொடர்ந்து அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்து அரசியல் பரபரப்பை கிளப்பி உள்ளது.
இது தொடர்பாக தி.மு.க.வின் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆர்.எஸ் பாரதி கிடுக்கிப்பிடி கேள்வி
இது குறித்து வெளியான அறிக்கையில், “தி.மு.க. அரசின் அமைச்சர்களும், தி.மு.க.வினரும் பல்வேறு அராஜங்களை கடடவிழ்த்து மக்களை வாக்களிக்க விடமாட்டார்கள். தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறாது. இதனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க புறக்கணிக்கிறது” என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, “ஒரு கட்சி தேர்தலை புறக்கணிக்கிறது என்றால், அந்த கட்சியை சேர்ந்தவர்களும் புறக்கணிக்க வேண்டும்; இடைத்தேர்தலில் வாக்களிக்கும் அதிமுகவினரை கட்சியில் இருந்து நீக்குவேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பாரா?" எனக் கிடுக்கிப்பிடி கேள்வியெழுப்பி உள்ளார்.
டி. ஜெயக்குமார் பேட்டி
இதற்கிடையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார், “இடைத்தேர்தலை புறக்கணிப்பதால் ஒன்றும் நடந்துவிடாது. பா.ஜ.க மற்றும் நாம் தமிழர் எல்லாம் பெரிய கட்சி அல்ல. இங்கு அ.தி.மு.க தான் பெரியக் கட்சி. தி.மு.க.வினர் தேர்தல் வந்துவிட்டால் அண்டா குண்டா கொலுசு எல்லாம் கொடுப்பார்கள். பாத்திரம் கழுவுவார்கள்; ஏன் துணி கூட துவைத்துக் கொடுப்பார்கள்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“