கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று (நவம்பர் 6) மாலை 4 மணியளவில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெற உள்ளதையொட்டி 3 இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ் பேரணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூரில் மட்டும் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெறுகிறது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் 1000 போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், கள்ளக்குறிச்சியில் டிஐஜி பாண்டியன் தலைமையில் 1100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பாடலேசுவரர் கோயில் வீதிகளில் பேரணி தொடங்கி தேரடி வீதிகளில் நிறைவு பெறுகிறது. பின்பு அங்கு பொதுக்கூட்டம் நடக்கிறது.
பெரம்பலூரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொருளாளர் கார்த்திக் கேசவன் தலைமையில் பேரணி நடைபெறுகிறது. பாலக்கரை பகுதியில் தொடங்கி வெங்கடேசபுரம், சங்குப்பேட்டை வழியாக சென்று மேற்கு வானொலி திடலில் நிறைவு பெறுகிறது. இங்கு 900-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் சேலம் மெயின் ரோட்டில் பேரணி தொடங்கி சவரை தெரு, எத்திராபாளையம், காந்திசாலை வழியாக சென்று மந்தைவெளியில் நிறைவு பெறுகிறது. அங்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
உயர் நீதிமன்றத்தில் மனு
தமிழகத்தில் அக்.2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று 50 இடங்களில் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களில் அனுமதி கோரியது. ஆனால் அப்போது பிஎஃப்ஐ அமைப்பின் அலுவலகங்களில் என்.ஐ.ஏ சோதனை, பெட்ரோல் குண்டு வீச்சு, பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை போன்றவற்றால் அசாதாரண சூழல் நிலவியது. இதை முன்வைத்து பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுத்தது.
இதை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. . இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நவ.6-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு காவல் துறை அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. பேரணிக்கான ஏற்பாடுகளை ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் செய்துவந்த நிலையில், கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் உருவானது.
கட்டுப்பாடுகள்
பின்னர் 44 இடங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பேரணி நடந்த அனுமதி வழங்கப்பட்டது. உள் அரங்கு, சுற்றுச்சுவர் பாதுகாப்புடன் கூடிய காலி மைதானம், விளையாட்டு அரங்குகளில் மட்டும் பேரணி நடத்த வேண்டும். கட்சி, தனிப்பட்ட நபர், தடை செய்யப்பட்ட இயக்கங்கள் குறித்து பேசக்கூடாது. மொழி, இனம், கலாச்சாரம், ஜாதியை மையமாகக் கொண்டு, பிரிவினையைத் தூண்டும் வகையிலான கருத்துகளைக் கூறக் கூடாது, இவற்றை அடிப்படையாகக் கொண்ட பாடல்களையும் பாடக் கூடாது. ஆயுதங்கள் கூடாது என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் பேரணிக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், இன்று நடக்கவிருந்த பேரணியை ஒத்திவைப்பதாகவும், நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அறிவித்தது. இந்தநிலையில் காவல்துறை அனுமதி பெற்ற 3 இடங்கள் கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் மட்டும் இன்று பேரணி நடைபெறுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil