காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரனை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கையை தமிழ்நாடு காங்கிரசின் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் நிறுத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15ந்தேதி அக்கட்சி எம்.எல்.ஏ ரூபி மனோகரன் ஆதரவாளர்களுக்கும், கே.எஸ்.அழகிரி ஆதரவாளர் ரஞ்சன் குமார் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து, காங்கிரஸ் கட்சி இந்த மோதல் தொடர்பாக ரூபி மனோகரன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. ரூபி மனோகரன் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை எனக் கூறி அவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்குவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி அறிவித்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரனை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை நிறுத்தி வைத்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழு மேற்கொண்டு வரும் விசாரணைகளையும் நிறுத்திவைப்பதாக தினேஷ் குண்டுராவ் அறிவித்துள்ளார்.
இது குறித்து தினேஷ் குண்டு ராவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் விசாரணை இயற்கை நீதி கொள்கைக்கு முரணாக அமைந்துள்ளது. இந்த விசாரணை உரிய முறையில் நடைபெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"