திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி மற்றும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆகியோரைக் கண்டித்து அதிமுக மாநிலம் முழுவதும் போராட்டத்தை அறிவித்துள்ளது.
திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி கடந்த பிப்ரவரி மாதம், சென்னை அன்பகத்தில் கலைஞர் வாசகர் வட்டம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கருத்துகள் நீதிபதிகளையும், பட்டியலின மக்களையும் புண்படுத்துவதாக அமைந்தது. இது தொடர்பாக, கடந்த வாரம் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமீனில் வெளிவந்தார்.
மற்றொரு சம்பவத்தில், திமுக எம்பிக்கள் தயாநிதிமாறன், டி. ஆர் பாலு ஆகியோர் திமுவின் ” ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் ” பெறப்பட்ட மனுக்களை தலைமைச் செயலாளரை சந்தித்து வழங்கினார்கள். அப்போது, தலைமைச் செயலாளர் தங்களை மூன்றாம் தர மக்கள் போல் நடத்தினார் எனவும், தாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட ஆட்களா எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆளும் கட்சியான அதிமுக, பட்டியலின மக்களுக்கு எதிராக பேசும் திமுக நிர்வாகிகளைக் கண்டித்தும், திமுகவினரின் பேச்சைக் கண்டிக்காத மு.க ஸ்டாலினைக் கண்டித்தும் வரும் ஜூன் 1 ஒன்றாம் தேதி கண்டன ஆர்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில்," தமிழகத்தில் உயர் பதிவில் இருக்கக்கூடிய பட்டியலின மக்களை தொடர்ந்து இழிவாக பேசிவரக்கூடிய திமுக திமுக நிர்வாகிகளை கண்டித்தும், தலைமை பொறுப்பில் இருந்து கொண்டு திமுகவினரின் தரக்குறைவான பேச்சுகளை கண்டிக்காத திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் அதிமுக சார்பில் வரும் ஜூன் 1ம் தேதி காலை 10.30 மணி முதல் 11 மணி வரை நடைபெறக்கூடிய கண்டன ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில், நான்கவாது பொதுமுடக்க நிலை வரும் மே- 31ம் தேதியோடு முடிவடையும் நிலையில், கொரோனா பெருந்தொற்றுக் எதிரான நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து யோசிக்கும் தருணத்தில், நகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம் மற்றும் அதிகம் மக்கள் கூடும் 4 அல்லது 5 இடங்களில் ஆர்பாட்டம் செய்யுமாறு ஏற்பாடுகள் செய்ய மாவட்ட தலைமை செயலாளருக்கு ஆளும் கட்சி அழைப்பு விடுத்திருப்பது புரியாத புதிராகவே உள்ளது என்று ட்விட்டரில் பொது மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil